தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக தன்னுடைய நடிப்புக்காக முத்திரைப் பதித்த நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. தாய் மொழி தமிழாக இல்லை என்றாலும் அந்த மொழியை உணர்ந்து அதற்கேற்றார்போல பாவனைகள் கொடுத்து ‘எக்ஸ்பிரஷன் க்யீன்” என்றே பெயர் வாங்கியவர்.
தனது அற்புத நடிப்பால் வித்தியாசமான கதாபாத்திரங்களால் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். ஜோதிகாவின் குடும்பம் கலை குடும்பமாகவே இருந்துள்ளது. அவரின் அக்காவான நக்மாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர்தான். பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடித்த நிலையில் அதன் பிறகு இருவரும் காதல் வலையில் சிக்கி கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்குப் பிறகு 10 ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி இருந்தார் ஜோதிகா. அதன் பிறகு மீண்டும் கம்பேக் கொடுத்து தன் வயதுக்கு ஏற்ற வேடங்களை ஏற்று நடித்தார். தற்போது மும்பையில் செட்டில் ஆகியுள்ள அவர் தொடர்ந்து இந்தி படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் திருமணத்துக்குப் பின்னர் ஏன் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகினார் என்பது குறித்துப் பேசியுள்ளார். அதில் “நான் சினிமாவில் இருந்து விலகியதற்கு சூர்யாவும், அவர் குடும்பமும்தான் காரணம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையில்லை. குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக நான்தான் சினிமாவை விட்டு விலகினேன். அதற்கு அவர்கள் காரணமில்லை. அது நான் விரும்பி எடுத்த முடிவு” எனக் கூறியுள்ளார்.
