தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கணேசனாக நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது.
அந்த படம் அவருக்கு மட்டும் திருப்புமுனையாக அமையாமல் தமிழ் சினிமாவுக்கே ஒரு ட்ரண்ட் செட்டராக அமைந்தது. அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. 25 ஆண்டுகளுக்கும் மேல் கதாநாயகனாகவு, அதன் பிறகு 20 ஆண்டுகள் குணச்சித்திர நடிகராகவும் கலக்கினார்.
அப்படிப்பட்ட சிவாஜிக்கு நடிப்புக்காக ஒருமுறை கூட தேசிய விருது வழங்கப்படவில்லை. அதற்குக் காரணமாக சொல்லப்பட்டது, சிவாஜி கணேசன் ஒரு ஓவர் ஆக்டிங் நடிகர் என்ற விமர்சனங்கள்தான். தேசிய விருது குழுவில் இருக்கும் ஜூரிகளுக்கு சிவாஜி நடிப்பு பற்றி இத்தகைய ஒரு விமர்சனம் இருந்ததாக எழுத்தாளரும் நடிகருமான பாரதிமணி தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். இதே கருத்தைதான் எம் ஜி ஆர் ரசிகர்களும் சிவாஜி மேல் ஒரு குற்றச்சாட்டாக வைத்தனர்.
ஆனாலும் சிவாஜிக்கு வெறித்தரமான ரசிகர்கள் அவரது மறைவுக்குப் பின்னரும் இப்போது வரை இருக்கிறார்கள். அவரின் படங்கள் ரி ரிலீஸ் ஆகும்போதெல்லாம் அதைக் கொண்டாடி மகிழ்கின்றனர். சிவாஜியோடு நடித்த பலக் கலைஞர்கள் அவரைப் பற்றி சொல்வது அவரின் நேரம் தவறாமை மற்றும் செட்டை விட்டு வெளியேறாமல் அன்றைய ஷுட் முடியும் வரை இருப்பார் என்பதுதான்.

இந்நிலையில் பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான குட்டி பத்மினி சிவாஜி பற்றி ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அதில் “சிவாஜி சார் செட்டுக்கு வந்தா அன்றைய ஷூட்டிங் முடியாமல் வெளியே செல்ல மாட்டார். அவருக்குக் காட்சிகள் இல்லை என்றாலும் அங்கேயே ஓரமாக உட்கார்ந்து மற்றவர்களின் நடிப்பைப் பார்த்துக் கொண்டே இருப்பார். ஆனால் அவரைக் கூட ஏமாற்றியவர் என்றால் அது பாலையா அண்ணன்தான். ரிகர்சலில் பண்ணியதை விட வேறு ஒன்றை அவர் ஷாட்டில் பண்ணிவிடுவார். அவருக்கு தெரியும் சிவாஜியோடு போட்டி போடவேண்டும் என்றால் இப்படி எதாவது பண்ணவேண்டும் என்று. அதைப் பார்த்து சிவாஜி அண்ணனே ஷாக் ஆகிவிடுவார். ஆனால் அவர்களுக்குள் எந்த பொறாமையும் இருக்காது.” எனக் கூறியுள்ளார்.
