நான் எம் ஆர் ராதா பையன்னு யாரும் எனக்கு வாய்ப்புத் தூக்கிக் குடுக்கல… டி ஆர் தான் கடவுள் மாதிரி – ராதாரவி நெகிழ்ச்சி!

By vinoth on பங்குனி 14, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர்களில் ஒருவர் எம் ஆர் ராதா. நாடக உலகில் சிவாஜி, எம் ஜி ஆருக்கெல்லாம் சீனியரான ராதா, 1930 மற்றும் 40 களிலேயே சில படங்களில் நடித்தாலும், நாடகம் அளவுக்கு அவருக்கு சினிமா பிடிக்கவில்லை. அதனால் நாடகங்களிலேயே கவனம் செலுத்தினார். ஆனாலும் 60 கள் மற்றும் 70 களில் முன்னணி நடிகராகவும் வந்தார்.

அவருக்குப் பிறகு அவரின் வாரிசுகள் பலர் தமிழ் சினிமாவில் இன்றளவும் நடித்து வருகின்றனர். அவரின் மகன்களில் ஒருவரான  ராதாரவி கே பாலச்சந்தரின் மன்மத லீலை திரைப்படத்தின் மூலம் நடிகரானார். தந்தை வழியைப் பின்பற்றி  குணச்சித்திரம் மற்றும் வில்லன் என அனைத்து வகையான கதாபாத்திரங்களிலும் நடித்துக் கலக்கினார். 80 களில் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த தற்போது வில்லன், குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை எனக் கலக்கி வருகிறார். இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் இப்போதும் பிஸியான நடிகராக உள்ளார்.

   

ராதாரவி நடிகர் மட்டுமில்லாமல் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வருகிறார். அதுமட்டுமில்லாமல் டப்பிங் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். அவரின் தனித்துவமான குரல் வெளியே தெரியாமல் அவர் டப்பிங் பேசிய கதாபாத்திரங்களில் ஒன்று ஆடுகளம் படத்தின் பேட்டக்காரன் கதாபாத்திரம். அந்த கதாபாத்திரம் கொண்டாடப்பட்டதற்கு ராதாரவியின் குரலும் ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை.

   

 

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராதா ரவி தன்னுடைய ஆரம்பகால நடிப்பு வாழ்க்கையின் சவால்கள் குறித்துப் பேசியுள்ளார். அதில் “நான் எம் ஆர் ராதாவின் மகன் என்பதால் எனக்கு யாரும் வாய்ப்பைத் தூக்கிக் கொடுத்துவிடவில்லை. ஒரு படத்தில் ஒரு காட்சி, ரெண்டு காட்சியில் வருவதற்கே நான் போராடி வந்தேன். அப்போது டி ராஜேந்திரன்தான் எனக்குக் கடவுள் மாதிரி வந்து நல்ல வேடங்களை எல்லாம் கொடுத்தார். அதன் பின்னர்தான் நான் கவனிக்கப்படும் நடிகரானேன்” எனக் கூறியுள்ளார். டி ராஜேந்தரின் ஆரம்பகால படங்களில் எல்லாம் ராதாரவி தொடர்ந்து நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.