தமிழ் சினிமாவில் ரத்தம், அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் வன்முறை போன்ற விஷயங்கள் எதுவும் இல்லாமல் மென்மையான திரைப்படங்களை இயக்கக் கூடியவர் தான் இயக்குனர் விக்ரமன். இவர் இயக்கிய முதல் திரைப்படம் புதுவசந்தம். இந்தப் படத்தில் முரளி, சார்லி, ஆனந்த் பாபு மற்றும் சித்தாரா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். திருமணமாகாத நான்கு ஆண்களுடன் ஒரு பெண் நட்பாக பழக முடியும் அவர்களோடு ஒரே வீட்டில் தங்கி இருக்க முடியும் என்று நாகரிகமான கதையை அமைத்து படத்தை உருவாக்கி இருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து புதிய மன்னர்கள், கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக, சூரியவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தைப்போல, உன்னை நினைத்து மற்றும் பிரியமான தோழி என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார்.

இதில் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக திரைப்படம் தான் விஜயின் சினிமா கேரியரை திருப்பி போட்டது. சரத்குமாரை வைத்து இயக்கிய சூரியவம்சம் தமிழ் சினிமாவில் இதுவரை மிகவும் அதிக பேர் பார்த்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அதனைப் போலவே விஜயகாந்துக்கும் வானத்தைப்போல என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார். விக்ரமன் எப்போதுமே வெளிப்படையாக பேசும் பழக்கம் கொண்டவர். மனதில் ஒன்று வெளியே ஒன்று என பேசும் பழக்கம் அவருக்கு கிடையாது. ஒரு கட்டத்தில் விக்ரமன் சொல்வது சரி என்பதை புரிந்து கொண்டு நடிகர்கள் பலரும் இவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து விடுவார்கள். இப்படியான நிலையில் விக்ரமன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜெயலலிதா பற்றி பேசியுள்ளார். அதில், ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் நான் அவரை சந்திக்க சென்று இருந்தேன்.

அப்போது நான் இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கிறேன் எங்களுக்கு சில கோரிக்கைகள் உள்ளது அதை உங்களிடம் சொல்லலாமா என்று நான் கேட்டேன். அப்போ அவங்க சொல்லுங்க என்று சொன்னாங்க. நானும் வரிசையாக எல்லா கோரிக்கைகளையும் சொல்லிக் கொண்டே வந்தேன். முன்பெல்லாம் சாலையில் எந்தவித இடையூறும் இல்லாமல் இஷ்டத்துக்கு படம் எடுக்க முடிந்தது. இப்போ அனுமதி இல்லாமல் அண்டை மாநிலத்தை தேடிச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. நிறைய பேர் புதுச்சேரிக்கு செல்ல ஆரம்பிச்சிட்டாங்க.

இதெல்லாம் நம் மாநிலத்திற்கு வரவேண்டிய revenues என்று அவங்க கிட்ட சொன்ன. உடனே அவங்க அப்படியா என்று கேட்டுட்டு அருகில் இருந்தவரை அழைத்து எதற்கு இதற்கெல்லாம் அனுமதி கொடுக்காமல் வச்சிருக்கீங்க உடனே அனுமதி கொடுங்கள் என்று ஆர்டர் போட்டாங்க. பிறகு கோவில்களில் எல்லாம் முன்பு சூட்டிங் எடுத்துக் கொண்டிருந்தோம் இப்போ எந்த கோவிலிலும் அனுமதி கிடையாது அதை கொஞ்சம் பாருங்க என்று அவங்க கிட்ட சொன்னேன். உடனே ஜெயலலிதா அம்மா அதை மட்டும் சொல்லாதீங்க விக்ரமன் இந்த கோவில்களில் அனுமதி கொடுக்கக் கூடாது என்று ஆர்டர் போட்டதே நான் தான் என்று சொன்னாங்க.

அதற்கு நான் மேடம் நீங்க என்ன ஆர்டர் போடுறீங்களோ அதுபடி நாங்க நடந்துக்கிறோம் கோவிலுக்குள் டீ சாப்பிட மாட்டோம் அசைவ உணவுகளை சாப்பிட மாட்டோம் நாகரீகமாக நடந்து கொள்கிறோம் என்று கூறினேன். உடனே ஜெயலலிதா இதெல்லாம் இங்க சொல்லாதீங்க நானும் சினிமாவிலிருந்து வந்தவதான் என்ன நடக்கும் என்று எனக்கும் நன்றாகவே தெரியும் இந்த ஒரு கோரிக்கையை மட்டும் என்கிட்ட வைக்காதீங்க என்று வெளிப்படையாக பேசிட்டாங்க என்று விக்ரமன் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.
