இந்தி சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை தமிழ் பாடல்கள் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்தி ரசிகர்களையும் தமிழ் சினிமா பாடல்களைக் கேட்க வைத்தவர் ஏ ஆர் ரஹ்மான் என்று சொல்வார்கள்.
தான் அறிமுகமான ரோஜா திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் ஹிட்டடித்தன. அதன் பின்னர் ரஹ்மான் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரோடு இணைந்து பணியாற்றிய படங்களின் பாடல்கள் எல்லாம் இந்தியா முழுவதும் வைரல் ஹிட்டாகின. பாடல்களுக்காகவே சில பாடல்கள் ஹிட்டாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோர்தான் அந்த காலத்தில் ரஹ்மானின் பாடல்களை மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்றால் அது மிகையாது. அதன் பின்னர் இந்தி சினிமா, ஹாலிவுட் மற்றும் உலக சினிமா என அடுத்தடுத்து அவரின் வளர்ச்சி உயர்ந்து கொண்டே சென்றது.

ரஹ்மானின் தனிச்சிறப்பு என பல பாடகர்கள் பாராட்டி சொல்வது அவர் பாடகர்களுக்கு அதிகளவில் சுதந்திரம் கொடுத்து அவர்களின் திறமையை அருமையாக வெளிக்கொண்டு வருவார் என்பதுதான். அதை சமீபத்தில் பாடல் ஆசிரியர் யுகபாரதியும் ஒரு நிகழ்ச்சியில் உறுதி செய்துள்ளார்.
யுகபாரதி எழுதிய மாமன்னன் படத்தில் இடம்பெற்ற ‘மலையிலதான் தீப்பிடிக்குது ராசா’ என்ற பாடலை பாட வடிவேலுவை அணுகியுள்ளனர். பாட்டு வரிகளும், ட்யூனும் கடினமாக இருந்ததால் அவர் முதலில் மறுத்துள்ளார். ஆனால் வற்புறுத்தி அவரை சம்மதிக்க வைத்துள்ளனர். ரெக்கார்டிங்கின் போது வடிவேலுவால் சரியாகப் பாட முடியவில்லையாம்.
பதற்றமான அவரை அருகில் உட்காரவைத்து ஒரு காஃபி குடிக்க சொல்லிவிட்டு, அவர் நாகூர் ஹனிபாவின் பழைய பாடல்களை எல்லாம் பாடுவார் என்று கேட்டு பாடிக் காட்ட சொல்லியுள்ளார். வடிவேலுவும் பாடியுள்ளார். அதைக் கேட்டுவிட்டு ‘இவ்ளோ கஷ்டமான பாடல்களை எல்லாம் பாடிவிட்டு இந்த பாட்டை உங்களால் பாடமுடியாதா?’ எனக் கேட்டார். உடனே வடிவேலுவுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. அடுத்த பதினைந்து நிமிடத்தில் பாடல் ரெடியாகிவிட்டது. அதுதான் ரஹ்மானின் மேதைமை. அவரால் யாரை வேண்டுமானாலும் பாட வைக்க முடியும்.
