தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி அதன்பின்னர் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து தற்போது முக்கியமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் பசுபதி. இதுவரை இவர் நடித்திராத கதாபாத்திரங்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு வில்லன், நகைச்சுவை,துணை நடிகர், கதாநாயகன் என அணைத்து கேரக்டரிலும் நடித்து மக்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பிரபலமாக உள்ளார்.
நாடகத்துறையில் இருந்த இவரை நாசர் மூலமாக அறிமுகம் பெற்ற கமல்ஹாசன் தன்னுடைய மருதநாயகம் படத்திலேயே அறிமுகப்படுத்தினார். ஆனால் கெடுவாய்ப்பாக அந்த படம் ரிலீஸாகாததால் அவரின் அறிமுகம் தாமதமானது. அதன் பின்னர் நாசரின் ‘மாயன்’ திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருப்பார்.
ஆனால் பசுபதியை விருமாண்டி படத்தில் அவர் நடித்த வில்லன் கதாபாத்திரம்தான். கமல்ஹாசனுக்கு இணையான நடிப்பை பசுபதி அதில் வெளிப்படுத்தியிருப்பார். ஆனால் அந்த படம் ரிலீஸான பின்னர் அதே போன்ற வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை வில்லன் வேடமாகவே அவருக்கு வந்ததாம். அதனால் ஒரு ஐந்தாறு படங்களிலேயே அவருக்கு சினிமா சலிப்பை ஏற்படுத்திய நிலையில் சினிமாவை விட்டே விலகலாம் என்ற முடிவை எடுத்துள்ளார்.

அப்போது ஒரு நாள் கமல்ஹாசனின் அலுவலகம் சென்று தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு பதிலளித்த கமல்ஹாசன் “கொஞ்ச நாட்களில் நல்ல வேடம் வரும், எனக்குக் கூட ஆரம்பத்தில் போலீஸ் வேடங்களாக வந்தது. மோகனுக்கு எல்லாப் படங்களிலும் மைக்கைக் கொடுத்து விடுவார்கள். அதனால் நம்பிக்கை இழக்காதீர்கள்” எனக் கூறினாராம்.
அதோடு மட்டும் இல்லாமல் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் அதுவரை பசுபதி நடிக்காத நகைச்சுவையான வேடத்தையும் கொடுத்துள்ளார். அந்த வேடம் கிடைத்தபின்னர்தான் பசுபதியால் நகைச்சுவையாகவும் நடிக்கமுடியும் என்ற எண்ணம் ரசிகர்களுக்கும் திரை இயக்குனர்களுக்கும் கிடைத்துள்ளது. அதன் பின்னர் பசுபதி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பார் என்ற அபிப்ராயம் இப்போது வரை நிலவுகிறது.
