நடிகர் சிங்கம்புலி பல திரைப்படங்களில் உதவி இயக்குனர், கதை ஆசிரியர் மற்றும் இயக்குனராக இருந்தாலும் இதுவரைக்கும் காமெடி நடிகராகவே நடித்து வந்த நிலையில் முதல் முறையாக மகாராஜா திரைப்படம் மூலம் தான் வில்லன் அவதாரம் எடுத்தார். இது ஒரு பக்கம் பாராட்டுக்களையும் மற்றொரு பக்கம் விமர்சனத்திற்கும் உள்ளாகியது. நடிகர் சிங்கம் புலி பிதாமகன் மற்றும் நான் கடவுள் போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு ரெட், மாயாவி போன்ற திரைப்படத்தை இயக்கவும் செய்தார். ஆனால் அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் மாயாண்டி குடும்பத்தார் படத்திற்கு பிறகு கிடைக்க தொடங்கியது.

அந்தத் திரைப்படத்தில் ஒரு குழந்தை போல சாக்லேட் சாப்பிட்டு கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் சிங்கம் புலி யாராலும் மறந்து இருக்க முடியாது. அதிலும் தன்னுடைய அப்பாவான ஜி எம் குமாரிடம் அப்பா நீ செத்தா இந்த கட்டில் எனக்கு தானே என்று கேட்பது, பிறகு எல்லோரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போதே நீங்க எல்லாம் மாடு முட்டி தான் சாகப் போறீங்க என்று சாபம் கொடுப்பது போன்று பல இடங்களில் இவருடைய தனித்துவமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது. அதன் பிறகு நடித்த படங்களில் எல்லாம் சிங்கம் புலி காமெடி கேரக்டரிலேயே நடித்து வந்திருந்தார்.

ஆனால் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா திரைப்படத்தில் தான் அவர் பாலியல் வன்புணர்வு செய்பவராக நடித்திருந்தார். இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் தான் இருந்தது. தற்போதும் தொடர்ந்து சினிமாவில் பிஸியாக பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சிங்கம் புலி சமீபத்தில் அளித்த பேட்டியில், மாயாண்டி குடும்பத்தார் படத்துல இரண்டு நாள் அடிக்க வேண்டும் என்று இயக்குனர் ராசு மதுரவன் என்னை ஏமாற்றி கூட்டிட்டு போனாரு. நானும் அவர் கூட நம்பி போயிட்டேன். அவன் என்னோட பிரண்டு தான். 41 நாள் படத்தை எடுத்துட்டான்.

ரெண்டு வருஷம் மூணு வருஷம் எல்லாம் ஒரு படத்துல நடிச்சிருக்கேன். ஆனா ஒரு இன்டர்வியூ எடுக்க கூட யாருமே வரல. மாயாண்டி குடும்பத்தார் படத்துல இன்னைக்கு முடிஞ்சிடும் நாளைக்கு முடிந்துவிடும் என்று சின்ன பிள்ளைக்கு விளையாட்டு காட்டுற மாதிரியே சொல்லி சொல்லி மொத்தம் 41 நாளைக்கு என்ன வச்சு சூட்டிங் எடுத்து முடிச்சாங்க. அந்தப் படம் அவ்வளவு பெரிய ஹிட் கொடுத்துச்சு. எனக்கு வீடு வாசல் கார் எல்லாம் வாங்கி கொடுத்துட்டு டைரக்டர் செத்துப் போயிட்டாரு. அதனால் எது நல்லது எது கெட்டது என்று நம்ப முடிவு பண்ண முடியாது. சினிமாவுல நம்முடைய உழைப்பு 100% இருக்க வேண்டும் என்று சிங்கம் புலி பேசியுள்ளார்.
