தமிழ் சினிமாவில் எப்படிக் கதாநாயக நடிகர்களுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இருகுமோ, அதுபோலவே வில்லன் நடிகர்களின் மிரட்டலான நடிப்பையும் சிலாகித்து ரசிக்கக் கூட்டம் உண்டு. அப்படிக் கொண்டாடப்பட்ட வில்லன் நடிகர்களின் பட்டியலைப் போட்டால் அதில் முதல் இடத்தில் வருவார் எம் என் நம்பியார்.
1950 களில் அறிமுகமான நம்பியார் எம் ஜி ஆர் சிவாஜி என இரு முன்னணி நடிகர்களுக்கும் தொடர்ந்து வில்லனாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். ஒரு கட்டத்தில் அவரின் வில்லன் நடிப்பைப் பார்த்து மிரண்ட பெண் ரசிகர்கள் அவருக்குத் தியேட்டரிலேயே சாபம் விடும் அளவுக்கு சென்றார்கள் என்பது சுவாரஸ்யமான விஷயம்.
இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். கேரளாவில் வட மலபார் பகுதியில் உள்ள கண்ணூரில் பிறந்தவர் நம்பியார். இவரது முழு பெயர் மஞ்சேரி நாராயண நம்பியார் என்பதாகும். தனது 13 வயது முதல் நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்த நம்பியார் மதுரை பாலநாத வினோத கான சபையில் சேர்ந்தார்.
1970 களின் இறுதியில் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி ஆகிய இருவரும் அரசியல் மற்றும் குணச்சித்திர வேடம் என்ற சென்றதால் எம் ஜி ஆருக்கு ஒரு இடைவெளி ஏற்பட்டது. அதன் பின்னர் வில்லனாக நடிக்காமல் குணச்சித்திர வேடங்களில் கலக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கினார்.

நம்பியார் வில்லனாக நடித்தாலும் பல அரிய குணங்களைக் கொண்டவர் என்பது பலருக்கும் தெரியாது. அதில் ஒன்றுதான் அவரின் ஆன்மீக ஈடுபாடு. அதிலும் கேரளாவில் உள்ள சபரிமலைக்குக் கோயிலுக்கு அவர் வருடம் தவறாமல் மாலை போட்டு சென்றுவிடுவாராம்.
அவர் தலைமையில் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் போன்றவர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு அவரோடு சென்று வந்துள்ளனர். மேலும் அவரின் இந்த ஆன்மீக ஈடுபாட்டை அறிந்த நடிகர்கள் அவரை ‘குருசாமி’ என்றுதான் அழைப்பார்களாம்.
