தமிழ் சினிமாவில் பாவலர் பிரதர்ஸாக அறிமுகமாகிய இளையராஜா சகோதரர்களில் இளையராஜா போலவே பன்முகத் திறமை கொண்டவர் அவரின் தம்பி கங்கை அமரன். பாடல் எழுதுவது, இசையமைப்பது, இயக்குனர், நடிகர் என பல துறைகளில் வெற்றி கண்டவர் கங்கை அமரன்.
தான் கால்பதித்த அனைத்து துறைகளிலும் அவர் வெற்றிகளை சுவைத்தார். அவர் இயக்கிய கரகாட்டக்காரன் திரைப்படம் தமிழ் சினிமாவின் ஆல்டைம் கமர்ஷியல் வெற்றிப் படமாக உள்ளது. அவர் எழுதிய ஆயிரக் கணக்கான பாடல்கள் கிளாசிக்காக அமைந்துள்ளன. தான் பிஸியாக இசையமைத்துக் கொண்டிருந்த போது தன்னை இயக்குனர் ஆக்கியது தன்னுடைய அண்ணன் இளையராஜாதான் எனக் கூறியுள்ளார் கங்கை அமரன்.
அதன் பின்னர் அவர் இயக்கிய கோயில்காளை, கரகாட்டக்காரன், சின்னவர் உள்ளிட்ட படங்கள் சூப்பர்ஹிட்டாகின. அதன் பின்னர் தன்னுடைய மகன் வெங்கட்பிரபுவைக் கதாநாயகன் ஆக்கி அவர் எடுத்த பூஞ்சோலை திரைப்படம் ரிலீஸாகவே இல்லை. அதன் பின்னர் அவர் சினிமாவில் பாடல் ஆசிரியராக மட்டும் பணியாற்றி வருகிறார்.

#image_title
சமீபகாலமாக படங்களில் இடம்பெறும் இசையை அவர் கடுமையாக விமர்சிக்கிறார். இசையில் இரைச்சல் அதிகமாகிவிட்டதாகவும், மேற்கத்திய இசைதான் தாக்கம் செலுத்துவதாகவும் கூறிவருகிறார். இந்நிலையில் பின்னணி இசையின் முக்கியத்துவம் குறித்துப் பேசியுள்ள கங்கை அமரன் “எம் எஸ் விஸ்வநாதன் இசையில் காட்சிக்குப் பொருத்தமாக இருக்கும். அவர் படங்களைப் பார்த்தால் இசை அதிகமாக இருக்கும்.
ஆனால் இளையராஜாவின் இசையைப் பார்த்தால் அதில் கூடுதலாக ஒன்று இருக்கும். அவர் சில இடைவெளிகளை விட்டு மீண்டும் இசையைத் தொடங்குவார். அப்போது ரசிகர்கள் அதை உணரத் தொடங்குவார்கள். இசை என்பது மிகவும் கவனமாக செய்யவேண்டிய விஷயம். அப்படி செய்யலன்னா இந்தியன் 2 போல இரைச்சல் ஆகிடும்.”எனக் கூறியுள்ளார்.
