தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் தான் தேனிசைத் தென்றல் தேவா. தற்போது இவர் சினிமாவில் படங்களில் அதிக அளவு இசையமைக்க வில்லை என்றாலும் தொடர்ந்து இசை கச்சேரிகளை நடத்தி வருவது மட்டுமல்லாமல் சினிமாக்களில் பாடல் பாடியும் வருகின்றார். சினிமாவில் புகழ்பெற்ற இவருக்கு ஸ்ரீகாந்த் தேவா என்ற மகனும் ஜெயப்பிரதா என்ற மகளும் உள்ளனர். மகன் ஸ்ரீகாந்த் தேவா இசை அமைப்பாளராக இருந்து வருகின்றார். சென்னை வடபழனியில் இசையமைப்பாளர் தேவா மகள் ஜெயப்பிரதாவுக்கு சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இவருடைய வீட்டை தீபிகா மற்றும் ஜெயக்குமார் தம்பதிகள் வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வாடகை வீட்டில் வசித்து வரும் தீபிகா கதறி அழுதபடி ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார். அதில், எனக்கும் என்னுடைய கணவருடைய உயிருக்கும் ஏதாவது பிரச்சனை என்றால் அதற்கு காரணம் ஜெயப்பிரதா தான் என்று அவர் கூறியுள்ளார். மேலும் வீட்டில் கத்தி குத்து உடன் புகுந்த ஏழு நபர்கள் தன்னை மிரட்டி விட்டு வீட்டிலிருந்து அனைத்து பொருட்களையும் அடித்து உடைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். அவர்களுடைய தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்ததே மிகப்பெரிய விஷயம் என்று அவர் கூறியுள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 100 நம்பருக்கு போன் செய்தும் தீபிகா தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இருந்தாலும் தீபிகா தரப்பிலிருந்து எழுத்துப்பூர்வமாக புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என தெரிகிறது. மேலும் போலீஸ் நடத்திய விசாரணையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஜெயப்பிரதாவின் வீட்டுக்கு தீபிகா வாடகைக்கு வந்துள்ளார். வீட்டின் வாடகை மாதம் 25 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் வீட்டில் குடியேறியதில் இருந்தே தீபிகா வீட்டுக்கான வாடகையை தராமல் இருந்துள்ளார்.

இது குறித்து தேவாவின் மகள் ஜெயப்பிரதா கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு போலீசில் புகார் அளித்துள்ளார். பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் முறையாக வாடகை செலுத்துவதாக கூறிய தீபிகா மீண்டும் வாடகையை வழங்காமல் இருந்துள்ளார். தான் நடத்தி வரும் கடை நஷ்டத்தில் உள்ளதால் வாடகை தர முடியவில்லை என்று ஜெயப்பிரதாவிடம் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் தன்னுடைய குற்றச்சாட்டு தொடர்பாக தீபிகா இதுவரை எந்த ஒரு எழுத்துப்பூர்வ புகார் அளிக்கவில்லை.
