தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய பாடல் வரிகளால் கோலோச்சியவர் கவிஞர் வாலி. அவரின் ஆரம்ப காலத்தில் கண்ணதாசனோடும், 80 மற்றும் 90 களில் வைரமுத்துவோடும். 2000களில் முத்துகுமார் உள்ளிட்ட இளம் கவிஞர்களோடும் போட்டி போட்டார். ஆனால் அவர் அனைவரிடமும் நட்பாகப் பழகினார். இதனால் அவரை ரசிகர்கள் வாலிபக் கவிஞர் என்றே அழைத்தனர்.
திரையுலகில் வாலிக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர் நடிகர் எம் ஜி ஆர். தன்னுடைய படங்களுக்கு முதலில் கண்ணதாசனையே தொடர்ந்து பாடல்கள் எழுத வைத்து வந்தார் எம் ஜி ஆர். ஆனால் இருவருக்கும் இடையே அரசியல் ரீதியாக ஒரு பிரிவு வந்தது. எம் ஜி ஆர் தீவிரமாக திமுகவில் இயங்கி வந்த நிலையில், கண்ணதாசன் திமுகவில் இருந்து காங்கிரஸுக்கு தாவினார்.
அதன் பின்னர் கண்ணதாசன் எம் ஜி ஆரைக் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். அப்போதுதான் எம் ஜி ஆர் வாலியை தன்னுடைய ஆஸ்தான கவியாக மாற்றிக் கொண்டார். அதன் பின்னர் பல நடிகர்களுக்கு எழுதிய வாலி, கடைசியாக சிவகார்த்திகேயன் வரைக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். வாலியைப் பொறுத்தவரை திரையுலகில் அனைவருமே அவருக்கு நண்பர்கள்தான். சக பாடல் ஆசிரியர்கள் முதற்கொண்டு அனைவருமே அவரிடம் அன்பாகப் பழகுவார்கள்.
இந்நிலையில் வாலி இறப்பதற்கு முன்பு தன்னைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை வாலிப வாலி என்ற நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார். அதில் பேசும்போது தன்னுடைய இளம் வயதில் மும்பையில் இருந்த போது நடந்த ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

JRD Tata with Ratan Tata
அதில் “ஒருநாள் இரவு நான் பீச்சுக்கு சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது மழை பெய்ய ஆரம்பித்து நான் முழுவதும் நனைந்துவிட்டேன். அப்போது என்னருகில் ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்த ஒரு வயதான நபர் என்னைக் காரில் ஏறிக்கொள்ள சொன்னார். நான் வேண்டாம் உங்கள் கார் அழுக்காகிவிடும் என்றேன். ஆனால் அவர் என்னை வற்புறுத்தி காரில் ஏற்றி என் வீட்டில் கொண்டுவந்து விட்டார்.
இறங்கும்போது நான் அவரிடம் உங்கள் பெயர் என்ன என்று கேட்டேன். அதற்கு அவர் ‘என்னை மக்கள் JRD டாட்டா என்று அழைப்பார்கள்’ என்றார். எனக்குத்தூக்கி வாரி போட்டது. எப்பேர்ப்பட்ட மனிதர் அவர். என்னை வீட்டுவாசலில் இறக்கிவிட்டுப் போகிறாரே என்று.” எனப் பகிர்ந்துள்ளார்.
