பிரபல நடிகையான பத்மப்ரியா தமிழில் தவமாய் தவமிருந்து, சத்தம் போடாதே, பட்டியல், மிருகம் பொக்கிஷம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டு இயக்குனர் சாமி இயக்கத்தில் மிருகம் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

இந்த படத்தின் ஷூட்டிங் கடைசி நாளில் பத்மப்ரியா உணர்வுபூர்வமாக நடிக்கவில்லை என கூறி இயக்குனர் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அந்த விஷயம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள வடகராவில் நடந்த நிகழ்ச்சியில் பத்மபிரியா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது ஒரு பெண் பிரச்சினைகள் பற்றி கூறினால் அவரையே பிரச்சினையாக்கி விடுகின்றனர்.

மிருகம் பட சூட்டிங்கில் நடந்த சம்பவம் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆனால் ஊடகங்கள் அந்த செய்தியை மாற்றி வெளியிட்டது. சம்பந்தப்பட்ட இயக்குனர் என்னை அடித்ததால் நான் தமிழ் திரைப்பட சங்கங்களில் புகார் அளித்தேன். இதனால் இயக்குனருக்கு ஆறு மாதம் படம் இயக்க தடை விதிக்கப்பட்டது. முன்னதாக நான் தான் அந்த இயக்குனரை அடித்ததாக ஊடகத்தில் செய்திகள் வெளியானது.

மேலும் இயக்குனரை கேள்வி கேட்டதால் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் இருந்து நான் நீக்கப்பட்டேன். அந்த படத்தில் நடித்ததற்காக மாநில அரசு சிறந்த நடிகைக்கான விருதை அளித்தது. மேலும் நடிகர்களுக்கு தான் சினிமாவில் மார்க்கெட் என்று கூறுகின்றனர். 90% திரைப்படங்கள் பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலையில் நடிகர்களால் தான் படங்கள் ஓடுகிறது, நடிகைகளால் இல்லை என்று எப்படி சொல்ல முடியும் என்று பத்மபிரியா கேள்வி எழுப்பியுள்ளார். இதை பற்றிதான் இப்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

