1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.
படத்தின் கதாநாயகர்களுக்கு இணையாக அவருக்கும் கைதட்டல், விசில்கள் கிடைக்க ஆரம்பித்தன. இந்த நேரத்தில் பைரவி படத்தில் கதாநாயகனாக நடித்தார் ரஜினி. அந்த படம் வெற்றி பெற்று அவரை நிரந்தரக் கதாநாயகனாக்கி விட்டது. ஆனால் அதன் பிறகு ரஜினியை ஒரு வெற்றிகரமான கதாநாயகன் ஆக்கியது பஞ்சு அருணாச்சலம்தான். அவர்தான் பிரியா என்ற படத்தில் ரஜினியைக் கதாநாயகன் ஆக்கி சிங்கப்பூர் எல்லாம் சென்று படமாக்கி வந்தார்.
அதன் பிறகு ரஜினி தமிழ் சினிமாவில் எம் ஜி ஆரின் இடத்தை நிரப்பினார். அவர் படம் நாளுக்கு நாள் பிஸ்னஸ் அதிகமாகிக் கொண்டே சென்றது. ரஜினி, சூப்பர் ஸ்டாராக உருவான போது தமிழகத்தின் முதலமைச்சராகா இருந்தவர், அவருக்கு முன்பு சூப்பர் ஸ்டாராக இருந்த எம் ஜி ஆர். ஆனால் ரஜினிக்கும் எம் ஜி ஆருக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்று சொல்லப்படுகிறது. எம் ஜி ஆர் ஒருமுறை ரஜினியை தன் இல்லத்துக்கு அழைத்து தாக்கியதாகவும் வதந்திகள் உலாவந்தன.
இந்நிலையில் எம் ஜி ஆரின் அரசியல் கூட்டம் ஒன்றுக்கு சென்று ரஜினி போலீஸாரிடம் லத்தியால் அடிவாங்கிய சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. எம் ஜி ஆரின் அந்த கூட்டத்தில் தனது நண்பர்களோடு லுங்கி அணிந்து சென்றுள்ளார் ரஜினி. அப்போது அவர் நடிகர் ஆகியிருக்கவில்லை.
ஆனால் அந்த கூட்டத்தில் திடீரென கல்லெறிந்து சிலர் கலவரம் ஏற்படுத்தியுள்ளனர். அதனால் கூட்டம் கலைந்து ஓட, ரஜினியின் நண்பர்கள் தப்பித்து ஓடிவிட்டார்களாம். ஆனால் ரஜினி போலிஸாரிடம் மாட்டிகொண்டுள்ளார். அவருடைய தோற்றத்தைப் பார்த்த போலீஸார் ஒருவர் அவரும் கலவரக்காரர்களில் ஒருவர் என்று நினைத்து அவர் முதுகில் லத்தியால் தாக்கியுள்ளார். வீட்டுக்கு ஓடி சென்று பார்த்தபோது ரஜினியின் முதுகில் ரத்தம் கன்றி போய் சிவப்பாக இருந்ததாம்.
