‘மக்கள் நாயகன்’ என்று அழைக்கப்படும் ராமராஜன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கரகாட்டக்காரன்’. கங்கை அமரன் இயக்கத்தில் கருமாரி கந்தசாமி ஜெ துரை தயாரிப்பில் 1989 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கரகாட்டக்காரன். சினிமா உலகிலேயே பெரும் புரட்சியை ஏற்படுத்தியது இப்படம். படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பார். ராமராஜனுடன் கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, காந்திமதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
இப்படம் மாபெரும் வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி வசூல் சாதனை படைத்தது. இது ஒரு நகைச்சுவை கலந்த காதல் கதையாகும். ஒரு கரகாட்ட கலைஞரின் காதலை மையப்படுத்தி கதையை எழுதியிருப்பார் கங்கை அமரன். இந்தப் படத்தின் மூலம் இளையராஜா இசையில் கிராமிய இசையும் கரகாட்ட கலையும் புத்துயிர் பெற்றது.

ராமராஜன் அவர்களுக்கு கரகாட்டக்காரன் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அவரின் கேரியரில் முக்கியமான படம் இது என்றே சொல்லலாம். கரகாட்டக்காரன் திரைப்படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பரவி புகழ் அடைந்தார் ராமராஜன். மினுமனுக்கும் சட்டையும் ராமராஜனின் அடையாளமானது.
இப்படத்தின் மற்றொரு பலம் கவுண்டமணி செந்தில் ஆகியோரின் நகைச்சுவையாகும். இந்த கார வச்சிருந்த சொப்புன சுந்தரி இப்ப யாரு வச்சிருக்கா, இன்னொரு வாழைப்பழம் எங்க அதானே இது என்ற நகைச்சுவை அவ்வளவு பிரபலமானது. இன்றளவும் அனைவராலும் பேசப்படுகிறது. இந்த படத்தில் முதலில் கவுண்டமணி நடிப்பதாகவே இல்லையாம். அதற்கு பின்னால் ஒரு சுவாரசியமான சம்பவம் இருக்கிறது.
அது என்னவென்றால் ராமராஜனே ஒரு நேர்காணலில் இதைப்பற்றி பேசி இருப்பார். அவர் கூறியது, கரகாட்டக்காரன் படத்துல முதல்ல கவுண்டமணிக்கு பதிலா எஸ் எஸ் சந்திரனை நடிக்க வைக்க தான் படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனராம். ஆனால் ராமராஜன் ஒரு கட்சியை சேர்ந்தவர். எஸ் எஸ் சந்திரன் வேற கட்சியை சேர்ந்தவர். அதனால் இருவரும் ஒரு படத்தில் நடித்தால் பிரச்சினை ஆகும் வேண்டாம் என்று ராமராஜன் கூறியிருக்கிறார்.

இருந்தாலும் படக்குழுவினர் கேட்பதாக இல்லை. இதனால் கோபம் அடைந்த ராமராஜன் எஸ் எஸ் சந்திரன் இந்த படத்தில் நடிக்க கூடாது அவருக்கு பதில் கவுண்டமணியை போடுங்க. எஸ் எஸ் சந்திரன் நடித்தால் நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று ராமராஜன் கூறினாராம். அதற்குப் பிறகு படக்குழுவினர் வேறு வழியில்லாமல் கவுண்டமணியை நடிக்க வைத்தாராம். ஆனால் கவுண்டமணி செந்தில் காமெடி இப்படத்தில் நன்றாகவே ஒர்க்அவுட் ஆகி படம் ஹிட் ஆனது.
