கடந்த மாதம் 30-ஆம் தேதி இரவு ஒரு மணிக்கு கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் மலை கிராமங்களான முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டனர். தற்போது தேசிய பேரிடர் மீட்பு படையினரும், ராணுவத்தினரும் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட பல பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் வாரத்தில் இரண்டு நாட்கள் தனது முழு வருமானத்தையும் வயநாடு மக்களுக்கு உதவும் பொருட்டு முதல்வர் நிவாரண நிதிக்காக அனுப்புகிறார். அந்தப் பெண் கூறியதாவது, கிட்டத்தட்ட 25 வருஷமா நான் ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருக்கேன். உலகத்தையே உலுக்கிய வயநாடு சம்பவம் பற்றி நமக்கு தெரியும். எனக்கு ரொம்ப வேதனையா இருந்துச்சு. நம்மளால என்ன பண்ண முடியும். ஏதாவது உதவி பண்ணலாம்னு நினைக்கும் போது முதலமைச்சர் தேவைக்கு அதிகமான பொருட்கள் இருக்கு யாரும் பொருட்கள் அனுப்பாதீங்கன்னு சொல்லிட்டாங்க.

இதனால வாரத்துல ரெண்டு நாள் நான் ஆட்டோ ஓட்டி என்னோட முழு வருமானத்தையும் முதலமைச்சரோட நிவாரண நிதிக்கு அனுப்பனும்னு முடிவு பண்ணினேன். என் ஆட்டோல வர கஸ்டமர் அதுக்கான பணத்தை டைரக்டா முதலமைச்சரோட நிவாரண நிதிக்கு அனுப்பிடுவாங்க. அப்படி கூகுள் பே இல்லாதவங்க என் ஆட்டோவில் வச்சிருக்க உண்டியல்ல பணத்தை போட்டு விடுவாங்க. சென்னைய பொருத்தவரைக்கும் ஞாயிறு திங்கள் ஆட்டோ ஓட்டினால் அதிக வருமானம் வரும். நான் வழக்கமா ஞாயிற்றுக்கிழமை லீவு. ஆட்டோ எடுக்க மாட்டேன். ஆனா வயநாடு மக்களுக்காக உதவி பண்ணனும்னு ஞாயிறு, திங்கள் 2 நாளும் 16 to 18 மணி நேரம் ஆட்டோ ஓட்டி அந்த பணத்தை முதலமைச்சரோட நிவாரண நிதிக்கு அனுப்புறேன்.

இதை பற்றி KPY பாலாகிட்ட சொன்னேன். அவரு நான் பிஸியா இருக்கேன் வரமுடியாது அப்படி எதுவுமே சொல்லல. சொன்ன உடனே வந்தாரு. முதல் சவாரி அவர் தான் பண்ணாரு. அதுக்கப்புறம் கேரளா முதலமைச்சர் உடைய நிவாரண நிதிக்கு ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை அனுப்பினார். அரசாங்கம் அந்த fund-அ க்ளோஸ் பண்ற வரைக்கும் இந்த பணியை அப்படியே தொடரலாம்னு இருக்கேன். நேற்று ஒரு நாள்ல 14 ஆயிரம் ரூபாய் கேரளா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி இருக்கேன் என கூறியுள்ளார்.
View this post on Instagram
