1992 ஆம் ஆண்டு கமல்ஹாசன் திரைக்கதை வசனத்தில் தேவர்மகன் திரைப்படம் வெளியானது. இந்த படமும் காட்பாதர் திரைப்படத்தை தழுவி உருவாக்கப்பட்டதுதான். மணிரத்னம் காட்பாதர் திரைப்படத்தை ஒரு கோணத்தில் தழுவி நாயகன் உருவாக்கி இருந்தார் என்றால், கமல்ஹாசன் அதை வேறொரு கோணத்தில் தழுவி உருவாக்கி இருந்தார்.
இந்த படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன் மூவி மேஜிக் எனும் திரைக்கதை சாப்ட்வேரில் எழுதினார். அப்போதுதான் அந்த தொழில்நுட்பம் அறிமுகமாகியிருந்தது. அதைப் பற்றி அறிந்த கமல், உடனடியாக அதைப் பயன்படுத்தினார். இதனால் 10 நாட்களுக்குள் அந்த திரைக்கதையை அவர் முடித்தார் என்று சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் கமல்ஹாசனோடு சிவாஜி கணேசன், ரேவதி, கௌதமி, வடிவேலு, ரேணுகா, நாசர், காக்கா சீனிவாசன் என பலர் நடிக்க மலையாள இயக்குனர் பரதன் இயக்கினார். இளையராஜா இசையில் பாடல்கள் எல்லாம் வைரல் ஹிட்டாகின. இந்த படம் 1992 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி சூப்பர் ஹிட் திரைப்படமாக ஓடியது.
இந்த படத்தின் வெற்றிக்கு முதல் பாதியில் பெரிய தேவராக சிவாஜியின் பாத்திரம் மிக முக்கியக் காரணியாக அமைந்தது. சிவாஜியின் கேரியரில் அவரின் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய படமாக தேவர் மகன் அமைந்தது. இதற்காக அவருக்கு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. ஆனால் அதை சிவாஜி பெற்றுக் கொள்ளவில்லை.
படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியான சிவாஜி கணேசன், சினிமாத் துறையில் அவருக்கு நெருக்கமான நண்பர்களுக்கு விருந்தளித்துள்ளார். அதில் கவுண்டமணியையும் அழைத்துள்ளார். அனைவரும் படத்தையும் சிவாஜியின் நடிப்பையும் பாராட்டியுள்ளனர். ஆனால் கவுண்டமணி மட்டும் அமைதியாக இருந்துள்ளார்.
அவரை அழைத்த சிவாஜி “என்னடா எல்லோரும் படத்தைப் பாராட்டி பேசுறாங்க… நீ ஒன்னும் சொல்ல மாட்டேங்குற?” எனக் கேட்டுள்ளார். அதைக் கேட்ட கவுண்டமணி “படம்லாம் நல்லாதான் இருக்கு. உங்கள் எல்லாரும் பெரிய ஜாம்பவான்னு சொல்றோம். ஆனால் நீங்க படத்துல குழந்தை மிதிச்சு செத்து போயிட்டீங்களே” என ஜாலியாகக் கலாய்த்தாராம். அதைக் கேட்ட சிவாஜி அடக்கமுடியாமல் சிரித்துவிட்டாரம்.
