வ.உ.சி பெட்ரோல் வண்டி ஓட்டினார்.. அவர் வேஷத்துல நடிச்ச எனக்கு பட்டைய போட்டாங்க.. சிவகுமாரிடம் புலம்பிய சிவாஜி..

By vinoth on பங்குனி 6, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர்களில் ஒருவர் சிவாஜி கணேசன். பி யு சின்னப்பா, எம் ஆர் ராதா, பாலையா என சிறந்த நடிகர்களின் வரிசையில் பராசக்தி மூலமாக அதிர்வலையை உருவாக்கியவர் சிவாஜி கணேசன். அதன் பிறகு 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிகர் திலகமாக வலம் வந்தார். ஆனால் அவருக்கு ஒரு முறை கூட நடிப்புக்கான தேசிய விருது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். அந்த படத்தின் வெற்றி அவரை முதல் படத்திலேயே தவிர்க்க முடியாத நடிகராக்கியது.

   

கமர்ஷியல் படங்களில் மட்டும் நடிக்காமல் சிவாஜி கணேசன் வரலாற்று நாயகர்கள் பற்றிய பல படங்களில் நடித்துள்ளார். கர்ணன், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ராஜ ராஜ சோழன் போன்ற படங்கள் அவர் தன்னுடைய நடிப்பால் வரலாற்று நாயகர்களை நம் கண் முன்னால் நிறுத்தியிருந்தார்.

   

இதில் கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனார் அவர்களின் வாழ்க்கையை ஒட்டி உருவாக்கப்பட்ட படம். 1961 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தோல்விப் படமாக அமைந்தது. ஒரு சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாற்று படம் தோல்வியாக முடிந்துவிட்டதே என்ற ஆற்றாமை சிவாஜியின் மனதில் இருந்துள்ளது. அதை ஒருமுறை நடிகர் சிவகுமாரிடம் அவர் கொட்டியும் உள்ளார்.

 

சிவகுமார் இனி ஒரு சுதந்திரம் என்ற படத்தில் சுதந்திர போராட்ட தியாகியாக நடித்துள்ளார். அந்த படத்தை ஆசையாக சிவாஜிக்கு போட்டுக் காட்டியுள்ளார். அதைப் பார்த்த சிவாஜி “நான் வ உ சி யாக கப்பலோட்டிய தமிழன் படத்தில் நடித்தேன். வெள்ளைக்காரனை எதிர்த்து 2 கப்பல் ஓட்டிய வ.உ.சி கடைசிகாலத்தில் பெரம்பூர் பக்கத்தில் பெட்ரோல் வண்டியை தள்ளி பிழைத்துக்கொண்டிருந்தார். அப்படிப்பட்ட அற்புதமான மனிதரின் கேரக்டரில் நடித்த எனக்கு தமிழக மக்கள் நெற்றியில் பட்டையாக நாமத்தை போட்டுவிட்டார்கள். இப்போ நீ சுதந்திரபோராட்ட தியாகியாக நடித்திருக்கிறாய். மக்கள் நாமக்கட்டியை குழைத்துக்கொண்டு இருக்கிறார்கள் தயாரா இரு”  என்று ஆதங்கத்தோடு கூறியுள்ளார். அவர் சொன்னது போலவே இனி ஒரு சுதந்திரம் திரைப்படம் ஒரு தோல்வி படமாகவே அமைந்தது.