களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளாக பல தமிழ் சினிமாவில் துறைகளில் சாதனை படைத்துள்ளார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு என ஒரு பல்துறை வித்தகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய மூன்று திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.
சில நேரங்களில் கமல்ஹாசன் சிரத்தை எடுத்தும் உருவாக்கும் படங்கள் அப்போதைய ரசிகர்களை பெரிதாக ஈர்க்காமல் தோல்வி அடைந்துள்ளன. அப்படி கமல் நடிப்பில் சந்தானபாரதி இயக்கத்தில் உருவான திரைப்படம்தான் 1991 ஆம் ஆண்டு வெளியான குணா.
இந்த படம் அப்போதைய காலத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும் அந்த படத்தின் பாடல்களும், படத்தில் முக்கியமானக் காட்சிகளை உருவாக்கிய குகைக் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. கொடைக்கானலில் மனித நடமாட்டம் இல்லாத அந்த குகை அதன் பின்னர் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து குணா குகை என்றே அழைக்கப்பட்டு வந்தது.
அங்கு வந்த சுற்றுலா பயணிகளில் சிலர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. அதனால் இப்போது அந்த குகை பாதுகாப்பு வசதிகள் பொறுத்தி சுற்றுலா பயணிகளுக்கு பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான மஞ்சுல்லம் பாய்ஸ் இந்த குகையில் சிக்கிய ஒரு நபரை அவரின் நண்பர்கள் மீட்பது பற்றிய கதையாக உருவாகியுள்ளது. அதையடுத்து மீண்டும் குணா திரைப்படமும் குணா குகையும் இப்போது மீண்டும் சினிமா ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகியுள்ளது.
இந்நிலையில் இந்த படம் ரிலீஸான போது மனித நடமாட்டமே இல்லாத அந்த குகையை எப்படி கண்டுபிடித்தோம் என கமல்ஹாசன் அளித்த பேட்டி இப்போது வைரலாகி வருகிறது. அதில் “கொடைக்கானலில் மனித நடமாட்டம் இல்லாத ஒரு இடம் வேண்டுமென நானும் இயக்குனர் சந்தானபாரதியும் 7 கி மீ தூரம் நடந்து சென்றோம். இன்னும் ஒரு கிலோ மீட்டர் மட்டும் நடப்போம் என முடிவு செய்து நடந்த போது இந்த குகையைக் கண்டறிந்தோம். அங்கு ஒரு சர்ச் செட் போட்டும், குகைக்குள் சென்றும் சில காட்சிகளை படமாக்கினோம்” எனக் கூறியுள்ளார்.
