நடிகர் ஒருவிரல் கிருஷ்ணாராவ் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வறுமையின் நிறம் சிவப்பு படத்தில், நடிகை ஸ்ரீதேவியின் பொறுப்பற்ற அப்பாவாக நடித்திருப்பார். ஸ்ரீதேவியின் பாட்டி, அதாவது ஒருவிரல் கிருஷ்ணாராவின் அம்மா இறந்திருப்பார். அப்போது கமல், திலீப், எஸ்விசேகர் உள்ளிட்டோர் வறுமையில், பசியில் தவிப்பதை பார்த்து அவர்கள் சாப்பிட ஸ்ரீதேவி சமையல் தயார் செய்வார். அவர்கள் அனைவரும் சாப்பிட அமரும் தருவாயில், அந்த பாட்டி இறந்துவிடுவார். அவர்கள் சாப்பிடாமல் இருக்கும்போது அங்கு வரும் ஒருவிரல் கிருஷ்ணாராவ், அம்மா இறந்தது தெரிந்தும் அங்கு இலையில் பரிமாறப்பட்ட உணவை வெகு ஆர்வமாக சாப்பிடுவார்.

அதே போன்று மனிதன் படத்தில் ஒருகாட்சியில், ஒருவிரல் கிருஷ்ணாராவ் பஸ்சுக்காக காத்திருப்பார். அப்போது, அவர் அருகில் நின்றிருக்கும் செந்தில், ஒருவிரல் கிருஷ்ணாராவின் மணிபர்ஸை திருடிவிட. ரஜினி ஆட்டோவில் வந்து செந்திலை பிடித்து, பர்ஸை அவரிடம் இருந்து மீட்டுக் கொடுப்பார். சின்னதம்பி படத்தில், கவுண்டமணி மாமனாராகவும் இவர் நடித்திருப்பார். இப்படி துணை நடிகராக நடித்து ஒருவிரல் கிருஷ்ணாராவ், ஒருமுறை பட வாய்ப்புகளின்றி குடும்ப கஷ்டத்தில் சிரமப்பட்டு இருக்கிறார். அந்த நேரத்தில் கஷ்டம் என்றால் உதவும் வள்ளல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மட்டுமே.

ஒருவிரல் கிருஷ்ணராவ், ராமாவரம் தோட்டத்துக்கு போன் செய்திருக்கிறார். அப்போது போனை எம்ஜிஆரே எடுத்திருக்கிறார். நான் ஒருவிரல் கிருஷ்ணாராவ். தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். இப்போது குடும்ப கஷ்டமாக உள்ளது. 250 ரூபாய் கொடுத்து உதவினால், இந்த மாதத்தை சமாளித்து விடுவேன் என்று கூறியிருக்கிறார். நாளை காலை வாங்க என்று கூறியிருக்கிறார்.
மறுநாள் காலை ராமாவரம் தோட்டத்துக்குச் சென்ற ஒருவிரல் கிருஷ்ணாராவை சந்தித்த எம்ஜிஆரின் உதவியாளர், உங்களிடம் தரச்சொல்லி ஐயா கொடுத்தார் என ஒரு கவரை கொடுத்திருக்கிறார். அதில் 2 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. 250 ரூபாய் கேட்டால், 2 ஆயிரம் கொடுத்த அந்த நிகழ்கால வள்ளல், பொன்மனச் செம்மலை மனதார மகிழ்ந்து உச்சி குளிர்ந்து பாராட்டி இருக்கிறார் ஒருவிரல் கிருஷ்ணாராவ். இப்படி கேட்டதை விட அதிகமாக கொடுத்து உதவும் குணம் கொண்டவர்தான் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர்.
