நடிகர் கமல்ஹாசன் இப்போது இந்தியன் 2 மற்றும் 3 படங்களில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து கமல் நடிக்கிற 233வது படம், எச் வினோத் இயக்கத்தில் தயாராக உள்ளது. அதைத் தொடர்ந்து, கமல் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிற படத்தின் பெயர் நேற்று வெளியானது. தக் லைப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், நான் காயல்பட்டணத்துக்காரன் என்று கூறும் கமல், ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற பெயரில் கேங்ஸ்டராக நடிக்கிறார்.

இதை வைத்து கிண்டல் செய்துள்ள ப்ளு சட்டை மாறன், விக்ரம் படம் தந்த வெற்றியை அடுத்து மணிரத்னம் படத்தில் கத்தி, துப்பாக்கி, போதைப் பொருள் என சாக்குமூட்டையை தலையில் கட்டிக்கொண்டு கமல் கிளம்பிட்டாருய்யா, காயல்பட்டணத்துக்காரன் கேங்ஸ்டரு வர்றாருய்யா என கிண்டலடிக்கும் வகையில் ட்ரோல் செய்திருந்தார். தேவர் மகன்ல, அருவாளை கீழே போட்டுட்டு, குழந்தைகளை படிக்க வைங்கடா என்று சொன்னவர், இப்படி ஆகிட்டாரே என்றும் கிண்டலடித்து இருந்தார்.

தேவர் மகன் படத்தில், கமலின் கேரக்டர் பெயர் சக்திவேல், தசாவதாரம் படத்தில் ஆழ்வார்கடியானாக வரும் நம்பியின் கேரக்டர் ரங்கராஜன், நாயகன் படத்தில் வரும் கமல் கேரக்டர் வேலு நாயக்கர் என்பதால் தேவர்மகன், தசாவதாரம், நாயகன் படங்களின் கேரக்டர் பெயர்கள் இதில் தரப்பட்டுள்ளது. மேலும், வேலு நாயக்கர் காயல்பட்டணத்துக்காரன் என நாயகனில் குறிப்பிடுவதால், இது நாயகன் படத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்கின்றனர்.

ஆனால், 1800ம் ஆண்டுகளில் நடந்த குற்றப்பரம்பரை சார்ந்த ஒரு கதை என்றும் பேசப்படுகிறது. எது எப்படியோ, இப்போது கமலையும் கடுமையாக விமர்சித்து ட்ரோல் செய்து வருகிறார் ப்ளு சட்டை மாறன் என்பதுதான், சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
