தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை பெரம்பூர் தொகுதியில் பாமகவின் மாநில பொருளாளர் திலகபாமா வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். இதே தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும் போட்டியிடுவதால், பெரம்பூர் தொகுதி தற்போது தமிழகத்தின் மிக முக்கியமான ‘நட்சத்திரத் தொகுதியாக’ மாறியுள்ளது. திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சென்னையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஆர்.டி. சேகரை எதிர்த்து திலகபாமா களம் காண்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் பிறந்த திலகபாமா, ஒரு சிறந்த கவிஞராகவும் எழுத்தாளராகவும் அறியப்படுபவர். கல்லூரி காலத்திலேயே பெண்ணுரிமை சார்ந்த கவிதைகள் மற்றும் கதைகள் மூலம் சமூகப் பார்வையை வெளிப்படுத்திய இவர், பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார். தென்மாவட்டங்களில் பாமகவை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய இவர், கட்சியின் மாநில பொருளாளர் என்ற உயரிய பொறுப்பு வரை வளர்ந்துள்ளார். குறிப்பாக சிவகாசி, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் மகளிர் சங்கங்களை ஒருங்கிணைத்து பெண்களை அரசியல் மயமாக்குவதில் திலகபாமா தனி முத்திரை பதித்துள்ளார்.
தேர்தல் களத்தில் இவருக்குப் புதிய அனுபவம் ஏதுமில்லை. 2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல் எனப் பல களங்களைக் கண்டவர். சமூகப் போராட்டங்களிலும் இவர் முன்னின்று செயல்பட்டுள்ளார். குறிப்பாக 2017-ல் சிவகாசியில் மதுக்கடைக்கு எதிராகப் பெண்கள் நடத்திய எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். மேலும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நேரடியாக இலங்கை வரை சென்று முயற்சிகளை மேற்கொண்டது மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியது என இவரது சமூகப் பங்களிப்பு நீளமானது.
பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் மற்றும் திமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏ ஆகிய இரு பெரும் சக்திகளைத் திலகபாமா எதிர்கொள்கிறார். அதிமுகவின் வாக்கு வங்கி இவருக்குக் கைகொடுக்கும் பட்சத்தில், ஒரு வலுவான போட்டியை இவரால் வழங்க முடியும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஒரு கவிஞராகத் தொடங்கி, போராட்டக்களங்கள் வழியாகத் தற்போது ஒரு நட்சத்திரத் தொகுதியின் வேட்பாளராக உயர்ந்துள்ள திலகபாமா, விஜய்யின் புகழையும் ஆளுங்கட்சியின் பலத்தையும் தாண்டி வெற்றி வாகை சூடுவாரா என்பது மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும்.
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…
சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…