டேய் உன்ன அழுமூஞ்சி டைரக்டர்னு சொல்றாங்க… இப்படி ஒரு படம் எடுத்து வச்சிருக்க… பிரபல இயக்குனரின் சான்ஸ் கேட்ட சிவாஜி!

By vinoth

Published on:

தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயா சாதித்து சினிமா உலகின் கவனத்தை ஈர்த்தவர்களில் ஒருவர்தான் இயக்குனர் ஸ்ரீதர். 1954ம் ஆண்டு தன்னுடைய 21 ஆவது வயதில், சிவாஜி கணேசன், பத்மினி நடித்த எதிர்பாராதது என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்தப்படத்தை இயக்கியவர் சித்தரப்பு நாராயணமூர்த்தி. அதன்பின்னர் ஸ்ரீதருக்கு வரிசையாக படங்களில் கதை எழுத வாய்ப்புகள் குவிந்தன. அப்படி ஸ்கிரிப்ட் எழுதிய மற்றொரு ஹிட் திரைப்படம் அமரதீபம். இந்தப்படம் வெளியான ஆண்டு 1956.

இப்படி பல ஹிட் படங்களுக்கு கதை எழுதிய ஸ்ரீதர் கல்யாண பரிசு என்ற படத்தின் மூலம் தானே இயக்குனர் ஆனார். அந்த படமே தமிழ் சினிமாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. முக்கோணக் காதல் கதையை வித்தியாசமான பாணியில் அவர் உருவாக்கியிருந்தார். அதன் பின்னர் நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை , சிவந்த மண் பொன்ற ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்தார்.

   

அவரது படங்கள் பெரியளவில் வெற்றி பெற்றாலும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டாலும் ஸ்ரீதர் படங்களில் நகைச்சுவை இருக்காது என்றும் அவர் படங்களின் முடிவுகள் மிகவும் சோகமாக இருக்கும் என்று ஒரு கருத்து இருந்தது.

அதை மாற்ற வேண்டும் என முடிவு செய்த அவர் முழுக்க முழுக்க இளமை துள்ளலோடு நகைச்சுவையாக ‘காதலிக்க நேரமில்லை’ என்ற படத்தை இயக்கினார். அந்த படம் வெளியாகி பரபரப்பான வெற்றியைப் பெற்று இன்றளவும் நினைவு கூறப்படும் படமாக உள்ளது.

இந்த படத்தைப் பார்த்து வியந்த நடிகர் சிவாஜி கணேசன் ஸ்ரீதருக்கு போன் செய்து பாராட்டியுள்ளார். அப்போது ஜாலியாக “உன்னை எல்லோரும் ‘அழுமூஞ்சி டைரக்டர்’ என சொல்றாங்க. அவங்க முகத்துல கரி பூசுற மாதிரி நீ இப்படி ஒரு படம் எடுத்திருக்க. எனக்கும் கூட அது மாதிரி ஒரு பேர் இருக்கு. அதை உடைக்கிற மாதிரி என்னையும் வச்சு ஒரு காமெடி படம் பண்ணேன்.” என கேட்டுள்ளார். அதைக் கேட்டு ஸ்ரீதர் மெய்சிலிர்த்து சிவாஜிக்காகவே உருவாக்கிய திரைப்படம்தான்  “ஊட்டிவரை உறவு”. அந்த படமும் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது.