தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் சென்னை, திருப்பூர், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் எனப் பல்வேறு பகுதிகளில் தனியாக வசிக்கும் மூதாட்டிகளைக் குறிவைத்து அரங்கேறும் கொடூர பாலியல் அத்துமீறல்களும் கொலைகளும் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளன. வக்கிர புத்தி கொண்ட குற்றவாளிகளால் வயது முதிர்ந்த தாய்மார்கள் வன்கொடுமைக்கு ஆளாவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலை, முதியோர்களின் பாதுகாப்பில் காவல்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை ஆணித்தரமாக உணர்த்துகிறது.
சமீபத்தில் நாகப்பட்டினம் நகரின் மையப்பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் பகுதியில், 80 வயதான சின்னப்பொண்ணு என்ற மூதாட்டி முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக இறந்து கிடந்தார். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அதே பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்த ராமசாமி என்ற முதியவர் கைது செய்யப்பட்டார். சம்பவத்தன்று இரவு மூதாட்டியிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றபோது, அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமசாமி, கல்லைத் தூக்கி மூதாட்டியின் தலையில் போட்டு கொடூரமாகக் கொலை செய்ததோடு, இறந்த உடலையும் பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நாகப்பட்டினம் கொடூரம் மட்டுமன்றி, சென்னை புளியந்தோப்பு, வேளச்சேரி, திருப்பூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பாதுகாப்பற்ற நிலையில் தனியாக வசிக்கும் மூதாட்டிகளைக் குறிவைத்து நடத்தப்படும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கடலூரில் 93 வயது பாட்டிக்கு நேர்ந்த கொடூரமும், தற்போது நாகப்பட்டினத்தில் நடந்துள்ள சம்பவமும் சமூகத்தில் முதியோர்களுக்கான பாதுகாப்பு எந்த அளவில் இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இத்தகைய வக்கிர புத்தி கொண்ட குற்றவாளிகளின் பலவீனமான இலக்காக மாறும் மூதாட்டிகளைப் பாதுகாக்க வேண்டியது தற்போதைய காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது. தனியாக வாழும் முதியவர்களின் விவரங்களைச் சேகரித்து, அவர்கள் வசிக்கும் பகுதிகளில் இரவு நேர ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்துவதுடன், குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை அரசு பாய்ச்ச வேண்டும் என்ற கோரிக்கைகளும் தற்பொழுது மிக வலுவாக எழுந்துள்ளன.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள “சிங்கப்பெண் படைத் திட்டம்”, இளம்பெண்கள் மட்டுமின்றி, சமூகத்தில் தனியாக வாழும் மூதாட்டிகளின் பாதுகாப்பிற்கும் ஒரு பலத்த அரணாக விளங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. வயது முதிர்ந்த நிலையில் இருக்கும் நம் தாய்மார்களை வக்கிரக் காம மிருகங்களிடமிருந்து காக்க, இத்திட்டத்தின் மூலம் காவல்துறை இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி, முதியோர் பாதுகாப்புப் பணிகளில் இரும்புக்கரம் கொண்டு குற்றவாளிகளை ஒடுக்க வேண்டும்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…