2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்து எதிர்க்கட்சி அந்தஸ்துக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் தென்மண்டல முன்னாள் தளபதி மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, ஆளுங்கட்சியான த.வெ.க.வில் இணைந்து மதுரை மேயர் பதவியைப் பிடிக்கக் காய்களை நகர்த்தி வருவதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் இடியை இறக்கியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு முன்பே த.வெ.க. பல இடங்களில் தி.மு.க.வின் வெற்றியைப் பறிக்கும் என்று சரியாகக் கணித்துக் கூறியிருந்த கயல்விழி, தேர்தல் முடிவுகள் வெளியாகி விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற விழாவிலும் நேரடியாகப் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் நிலைப்பாடு குறித்து மறுத்திருந்தாலும், ஒரு தங்கையாகத் தனது அண்ணன் விஜய்யின் பதவியேற்பைக் காண வந்ததாகக் கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.
நீண்ட காலமாகவே தி.மு.க.விலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் மு.க. அழகிரியைத் தங்களது பக்கம் இழுக்க இதற்கு முன்பு ரஜினிகாந்தின் அரசியல் குழுவும், பா.ஜ.க.வும் பல ஆஃபர்களைக் கொடுத்து முயன்றன. ஆனால், “தி.மு.க.வை விட்டு வேறெங்கும் போக மாட்டேன், பதவிக்காக யாரிடமும் நிற்க மாட்டேன்” என்பதில் அழகிரி உறுதியாக இருந்தார். அண்மையில் தயாநிதி அழகிரியின் உடல்நலக் குறைவின் போது மு.க. ஸ்டாலினும், உதயநிதியும் நேரில் சென்று சந்தித்ததன் மூலம் குடும்ப அளவில் கசப்புகள் மறந்திருப்பது தெரிந்தாலும், கட்சி ரீதியாக அழகிரியையோ அல்லது அவரது ஆதரவாளர்களையோ தி.மு.க.வுக்குள் மீண்டும் இணைத்துக் கொள்ள மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மறுத்து வருகிறார். “ராமருக்கே 14 ஆண்டுகள் தான் வனவாசம்” என்று கயல்விழி தனது தந்தைக்காகப் பாசப் போராட்டம் நடத்தியும் தி.மு.க.வில் எந்த அசைவும் ஏற்படவில்லை.
இந்தச் சூழலில் தான், முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவுக்குப் பின் தலைமைச் செயலகத்திற்கும் வந்து சென்ற கயல்விழி, தற்போது த.வெ.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைய விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மதுரையில் பல தசாப்தங்களாகக் கோலோச்சிய மு.க. அழகிரியின் குடும்பப் பின்னணியைப் பயன்படுத்தி, தென்மண்டலத்தில் கட்சியை அடித்தட்டு வரை பலப்படுத்த த.வெ.க. தலைமை திட்டமிட்டுள்ளது. அதற்குப் பொருத்தமாக, கயல்விழிக்கு மதுரை மேயர் வேட்பாளர் பதவியைக் கொடுத்துக் களம் இறக்க த.வெ.க. தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது இந்த அதிரடி அரசியல் நகர்வுகளுக்காகத் தனது தந்தை மு.க. அழகிரியின் இறுதிப் பச்சைக்கொடிக்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும் கயல்விழி காத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தனை ஆண்டுகாலம் தி.மு.க.வோடு பயணித்த கூட்டணிக் கட்சிகள் பலவும் ஏற்கனவே த.வெ.க. பக்கம் சாய்ந்து வரும் நிலையில், கருணாநிதியின் குடும்ப வாரிசான கயல்விழியே த.வெ.க.வில் இணைந்து மதுரை மேயராகப் போட்டியிடத் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவது, தி.மு.க.வின் கோட்டையாகக் கருதப்படும் தென்மாவட்ட உடன்பிறப்புகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், தமிழக அரசியலில் புதிய பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…