விருதுநகரில் சினிமா பாணியில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பலாத்கார வழக்கு, திருட்டு மற்றும் கொள்ளை எனப் பல்வேறு குற்றங்களுக்காக 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொடூர குற்றவாளியான முகமது உசேன் என்பவர், கடந்த மே 9-ஆம் தேதி வயிற்று வலி காரணமாகச் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குப் பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, கழிவறை ஜன்னல் கம்பிகளை வளைத்து நைசாகத் தப்பியோடினார்.
கைதி தப்பியதை அறிந்த சேலம் மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.கிரி உத்தரவின் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தமிழகம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. போலீசாரின் பிடியில் சிக்காமல் இருக்க, அம்மாபேட்டை பகுதியில் ஒரு பூட்டிய வீட்டை உடைத்து 7 பவுன் நகை, ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனத்தைத் திருடிய முகமது உசேன், தனது அடையாளத்தை மறைக்கத் திட்டமிட்டார். அந்த வீட்டிற்குள் தாடி, மீசையுடன் சென்றவர், வெளியே வரும்போது அவற்றை முற்றிலும் சவரம் செய்து, ஆள் அடையாளமே தெரியாதபடி புதிய வேடத்தில் வலம் வந்து 13 நாட்களாகப் போலீசாருக்குத் தண்ணி காட்டி வந்தார்.
இந்நிலையில், முகமது உசேன் விருதுநகரில் பதுங்கியிருப்பதாகத் தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்து தேடியபோது, அவர் விருதுநகரில் உள்ள ஒரு பிரபல தியேட்டரில் ‘கருப்பு’ திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. திரையரங்கிற்குள் இருட்டாக இருந்ததால் குற்றவாளியை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்தது. இதனால் பொறுமை காத்த போலீசார், படம் ஓடிக்கொண்டிருந்த போது அதிரடி காட்டாமல், தியேட்டரில் விளக்குகள் ஒளிரும் இடைவேளை (இண்டர்வெல்) வரை காத்திருக்க முடிவு செய்தனர்.
திரைப்படத்தின் இடைவேளையின் போது தியேட்டரில் விளக்குகள் எரியத் தொடங்கியதும், இருக்கையில் அமர்ந்து ஹாயாகப் படம் பார்த்துக் கொண்டிருந்த முகமது உசேனை போலீசார் நாற்புறமும் சூழ்ந்து கொண்டு கையும் களவுமாகப் பிடித்தனர். தப்பியோடிய கைதிக்குத் தியேட்டரிலேயே ‘கிளைமாக்ஸ்’ காட்சி அரங்கேறியது அங்கிருந்த பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது. கைது செய்யப்பட்ட அவர், பலத்த பாதுகாப்புடன் மீண்டும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டதோடு, அவர் செய்த திருட்டுச் சம்பவங்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு சமீபத்தில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று…
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துராமன் என்பவரின் மனைவி மீனா (42). இந்த…
ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்தகா மாவட்டத்தில் உள்ள சேன்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முர்கிதோலர் கிராமத்தில் இயங்கி வரும் 'டாக்டர் பீம்…
மதுரை கீழமாத்தூர் பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகத் தமிழக வெற்றிக் கழகத்தின்…
சிட்னியில் ஓடும் ரயிலில் பயணித்த பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலும், அதற்கு அவர் காட்டிய துணிச்சலான எதிர்ப்பும் தற்பொழுது…
முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart), நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தங்களது பார்சல் சேவையை விரைவாக வழங்கும் நோக்கில்…