சென்னை தியாகராயநகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன், அண்மையில் சென்னை காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், சென்னை சாலிகிராமத்தில் ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் பதிவு செய்யப்படாத அமைப்பை நடத்தி வரும் பி.டி.அரசகுமார் என்பவர், தமக்குள்ள அரசியல் மற்றும் அதிகாரத் தொடர்புகளைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தரம் உயர்த்துதல், டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றியதாகக் குறிப்பிட்டிருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவிய கடுமையான நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, இவரை நம்பி தமிழகம் முழுவதும் உள்ள பல பள்ளி நிர்வாகிகள் அணுகியுள்ளனர்.
அரசாங்க அனுமதிகளை விரைவாகப் பெற்றுத் தருவதாகக் கூறி, பி.டி.அரசகுமார் பல்வேறு தனியார் பள்ளிகளிடம் இருந்து சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உறுதியளித்தபடி எந்தவொரு அனுமதியையும் பெற்றுத் தராமலும், வாங்கிய பணத்தைத் திருப்பித் தராமலும் அவர் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் புகாரில் முகாந்திரம் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சாலிகிராமம் மெஜஸ்டிக் காலனியில் வசித்து வந்த 59 வயதான பி.டி.அரசகுமார் அண்மையில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கைதைத் தொடர்ந்து, திமுக நிர்வாகியான பி.டி.அரசகுமாரின் சாலிகிராமம் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, மோசடி வழக்குடன் தொடர்புடைய மிக முக்கியமான பல ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், இந்த பிரம்மாண்ட பண மோசடிப் பின்னணியில் ஆளுங்கட்சியான தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தரப்பில் வெளியாகி இருக்கும் தகவல் தற்பொழுது அரசியல் மற்றும் கல்வித்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிகளிடம் இருந்து பணத்தை வசூலிப்பதற்காகவே, அந்த முன்னாள் எம்.எல்.ஏ. சென்னை தியாகராயநகரில் தனியாகப் பிரம்மாண்ட அலுவலகம் ஒன்றை நடத்தி வந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தலைமறைவாக உள்ள அவரைத் தீவிரமாகத் தேடி வரும் போலீசார், விரைவில் கைது செய்ய அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். மேலும், அரசகுமாரிடமோ அல்லது சம்பந்தப்பட்ட அந்த முன்னாள் எம்.எல்.ஏ.விடமோ பணம் கொடுத்து ஏமாந்த பள்ளி நிர்வாகிகள் யாரேனும் இருந்தால், தைரியமாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி உலகை உலுக்கியுள்ள இந்த வழக்கில் சிக்கும் அந்த முன்னாள் எம்.எல்.ஏ. யார் என்ற கேள்வி தற்போது தமிழகத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
மும்பையின் செம்பூர் பகுதியில் பள்ளிப் பேருந்து மீது அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், 11 வயது சிறுவன் ஒருவன்…
மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று அரங்கேறிய துயரச் சம்பவம் ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில்…
திருமணம் என்பது இரு மனங்களும், இரு குடும்பங்களும் இணையும் புனிதமான பந்தமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், இன்று சில இடங்களில்…
பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளர்களாக வேலை பார்த்து வரும் நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், ஞாயிற்றுக்கிழமை…
மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் கிராம ஊராட்சியில், உயிரிழந்த பசு ஒன்றின் உடல் குப்பை அள்ளும்…
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கானகர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டுப்…