மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள கங்காகேட் பகுதியில் இருக்கும் பார்லி நாகா அருகே அதிவேகமாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது ஏறி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பார்ப்போரைக் பதறவைக்கும் இந்த விபத்தின் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் (CCTV) பதிவாகியுள்ளன.
தகவலறிந்து வந்த உள்ளூர் காவல் துறையினர் உயிரிழந்த இளைஞர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரின் அசாத்திய வேகமும் கவனக்குறைவுமே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருவதுடன் விபத்து குறித்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
