தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர்.
பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜ் 1982 ஆம் ஆண்டு நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான திரைப்படம்தான் “தூறல் நின்னு போச்சு”. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பாக்யராஜை முன்னணி நடிகர் ஆக்கியது. இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை உருவாக்கமே மிகவும் வித்தியாசமாக இருக்கும். அவரே கதாநாயகனாக இருந்ததால் தனக்கான கதைகளை மட்டுமே எழுதவேண்டிய சூழல் வந்ததால் அவரால் இயக்குனராக ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் ஜொலிக்க முடியவில்லை.
இதற்கிடையில் அவர் இளையராஜாவோடு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இசையமைப்பாளராகவும் மாறினார். அவரின் ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு அவர்தான் இசையமைத்தார். அந்த படத்தின் பாடல்கள் ஹிட்டானாலும் அவர் இளையராஜாவோடு சேர்ந்து கொடுத்த சூப்பர் ஹிட் பாடல்கள் போல அமையவில்லை.
இந்த படத்தின் ஒரு பாடல் பதிவிற்காக ஜேசுதாஸை அழைத்துள்ளார்கள். பாடல் ரெக்கார்டிங்குக்கு தயாரான போது ஜேசுதாஸ் “பாடலை எப்படி பாடவேண்டும் என சொல்லுங்கள்’ எனக் கேட்டுள்ளார். அப்போது பாக்யராஜ் தன்னுடைய இசை உதவியாளரை உள்ளே அனுப்பி அவருக்கு பாடல் சொல்லிக் கொடுக்க சொல்லியுள்ளார்.
அவர் உள்ளே சென்று பாடல் சொல்லிக் கொடுத்ததும் ஜேசுதாஸ் கடும் கோபமாகியுள்ளார். பாக்யராஜை முறைத்துப் பார்த்து “யார் இவர்” எனக் கேட்டுள்ளார். அதற்கு பாக்யராஜ் “என்னுடைய உதவியாளர்தான் சார்” எனக் கூறியுள்ளார். அதனால் மீண்டும் கோபமான “ஜேசுதாஸ் ரெக்கார்டிங் ரூமில் இருந்து வெளியேறி ‘நானும் இந்த பாட்டைப் பாட என்னுடைய உதவியாளரை அனுப்பி வைக்கிறேன்’ என சொல்லி சென்றுவிட்டாராம்.
அதன் பின்னர் அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்து பாக்யராஜே எப்படி பாடவேண்டும் என சொல்லிக்கொடுத்து பாடவைத்தாராம். இந்த தகவலை பாக்யராஜே ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
