நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டியைச் சேர்ந்த 23 வயது இளைஞரான சங்கர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ஒரு வயது மகனின் பிறந்தநாளைக் குடும்பத்தினருடன் வெகுவிமர்சையாகக் கொண்டாடியுள்ளார். அந்த நிகழ்வின் போது தனது நண்பர்களுக்குக் மது வாங்கித் தந்த சங்கர், தானும் அளவுக்கு அதிகமாகக் குடித்துள்ளார். விழா முடிந்த பின்னரும் அவர் தொடர்ந்து மது அருந்தி வந்ததால், அதிர்ச்சியடைந்த அவரது மனைவி நந்தினி கணவரின் பழக்கத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மனைவியின் கண்டிப்பால் மனமுடைந்த சங்கர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தபோதிலும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த கையோடு தந்தை உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
