திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த 56 வயதான ருக்மணி என்ற ஏழைப் பெண், தனது வாழ்வாதாரத்திற்காக 125 நாள் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஏரி வேலைக்குச் சென்று வருகிறார். இந்நிலையில், தனது கூலிப் பணத்தைப் பெறுவதற்காக வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் வங்கிக்குச் சென்றவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. வணிகவரித்துறை உத்தரவின் பேரில் அவரது வங்கிக் கணக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆம்பூர் வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து வந்த கடிதத்தில், ருக்மணி ‘ஆர்.எம்.டிரேடர்ஸ்’ என்ற பெரிய வணிக நிறுவனத்தை நடத்தி ரூ.2.79 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் நிலை குலைந்துபோன அப்பெண், தான் எந்தத் தொழிலும் செய்யவில்லை என வங்கியிலேயே கதறி அழுதார். யாரோ மர்ம நபர்கள் இவரது ஆவணங்களைத் திருடி போலி நிறுவனம் தொடங்கி இந்த மோசடியைச் செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், இச்சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
