திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வசிக்கும் மணிவண்ணன் என்ற பைனான்சியர், தனது மனைவியுடன் திருத்தணி கோயிலுக்குச் சென்றிருந்த சமயத்தைப் பயன்படுத்தி, அவரது வீட்டில் இருந்த 50 சவரன் தங்க நகைகள் மர்மமான முறையில் கொள்ளையடிக்கப்பட்டன. பீரோவில் இருந்த ரூ,5 லட்சம் ரொக்கப் பணத்தையும் ஒன்றரை கிலோ வெள்ளியையும் தொடாமல், நகைகளை மட்டும் குறிவைத்துத் தூக்கிச் சென்றது குறித்து நாட்றம்பள்ளி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், மணிவண்ணனின் மனைவி கவிதாவின் அண்ணன் மனைவியான ஜோதி (36) மற்றும் அவரது கள்ளக்காதலன் மோகன் (28) ஆகியோர் இணைந்து இந்த துணிகரச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
மணிவண்ணனிடம் சீட்டு கட்டி வந்தபோது ஜோதிக்கும் மோகனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு தற்செயலாகக் கிடைத்த மணிவண்ணனின் பீரோ சாவியைப் பத்திரமாக வைத்திருந்த ஜோதி, தம்பதியினர் கோயிலுக்குச் சென்றதை அறிந்து, தன் காதலன் மோகனை வரவழைத்து நகைகளைச் சுருட்டியுள்ளார். தற்போது கள்ளக்காதல் ஜோடி இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 29 சவரன் நகைகளை மீட்டுச் சிறையில் அடைத்துள்ளதுடன், மீதமுள்ள 21 சவரன் நகைகளைக் கைப்பற்றத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
