மதுரையைச் சேர்ந்த பாலகணேஷ் – செல்வி தம்பதியின் 5 வயது இரட்டை குழந்தைகளான சாய்தீப்தி மற்றும் சாரு நித்திகா ஆகியோர், விடுமுறையைக் கழிப்பதற்காக ராமநாதபுரம் பசும்பொன் நகரில் உள்ள தங்களது தாத்தா முத்துமுருகன் வீட்டிற்கு வந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு வீட்டின் புழுக்கம் காரணமாகக் கதவைத் திறந்து வைத்துவிட்டு அனைவரும் உறங்கியுள்ளனர். மறுநாள் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது, தூங்கிக் கொண்டிருந்த சிறுமி சாய்தீப்தியைக் காணவில்லை. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கவே, மோப்ப நாய் உதவியுடன் தேடப்பட்ட சிறுமி, வீட்டின் அருகே இருந்த கிணற்றில் துரதிர்ஷ்டவசமாக சடலமாக மீட்கப்பட்டாள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சிறுமி கிணற்றில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டது குறித்து ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சிறுமியின் தாய் மாமா அஜீத்தின் மனைவி, அதாவது சிறுமியின் அத்தையான சபரிதா என்பவர்தான் சாய்தீப்தியைக் கிணற்றில் வீசிக் கொலை செய்தார் என்ற திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. காதல் திருமணம் செய்துகொண்ட அஜீத் – சபரிதா தம்பதியினருக்கு மாற்றுத்திறனாளி குழந்தை ஒன்று உள்ளது. ஆனால், அஜீத்தின் பெற்றோர் இந்த தம்பதியினர் மீதோ அல்லது அவர்களது மாற்றுத்திறனாளி குழந்தை மீதோ போதிய பாசம் காட்டாமல், தங்களது மகளான செல்வியின் குழந்தைகள் மீது அளவு கடந்த பாசத்தைக் கொட்டி வந்துள்ளனர்.
மாமனார் மற்றும் மாமியாரின் இந்த பாரபட்சமான நடத்தை சபரிதாவிற்குள் கடுமையான ஆத்திரத்தையும், வெறுப்பையும் வளர்த்துள்ளது. இந்த தீராத வன்மத்தின் காரணமாகவே, சனிக்கிழமை இரவு அனைவரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்த வேளையில், சிறுமி சாய்தீப்தியைத் தூக்கிச் சென்று கிணற்றில் வீசிக் கொலை செய்துள்ளார். போலீஸாரிடம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட சபரிதாவை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாமியார், மாமனார் மீது இருந்த கோபத்திற்காக, சீராட்டி வளர்க்க வேண்டிய 5 வயதுப் பிஞ்சு குழந்தையை அத்தையே பழிவாங்கிய கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியிலும் உறைவிலும் ஆழ்த்தியுள்ளது.
