கர்நாடகா மாநிலத்தில் உள்ள கலபுரகி மாவட்டத்தில் சகாபஜார் லே-அவுட் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்ற 38 வயது கூலி தொழிலாளியின் மனைவி ரூபா. இந்த தம்பதிக்கு கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த மூன்று மாதங்களாக ரூபாவின் நடத்தையில் வெங்கடேசுக்கு சந்தேகம் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி மனைவியிடம் வெங்கடேஷ் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த ரூபா கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.
மேலும் அதே பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையலராக வேலை பார்த்தும் வந்துள்ளார். இதனை அறிந்த வெங்கடேஷ் தினமும் மனைவி வேலைக்கு செல்லும்போது வழிமறித்து தகராறு செய்துள்ளார். ஆனால் ரூபா அதனை கண்டு கொள்ளவில்லை. நேற்று காலை வழக்கம் போல ரூபா ஹோட்டலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த வெங்கடேஷ் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். இதனால் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரூபா பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
