பீகார் மாநிலத்தில் வறுமையின் கொடூரத்தை உணர்த்தும் வகையில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கணவரின் மருத்துவச் செலவுக்காகத் தங்களது அனைத்து சேமிப்புகளையும் இழந்து நின்ற ஒரு குடும்பத்தில், கணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால், அவரது இறுதிச்சடங்குகளைச் செய்யக்கூட அரணா காசு இல்லாததால், அந்தப் பெண் தனது கணவனின் சடலத்துடன் சிறு குடிலுக்குள்ளேயே மூன்று நாட்களாகத் தனியாக அமர்ந்திருந்துள்ளார்.
மூன்று நாட்களுக்குப் பிறகு சடலத்திலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கிய பிறகே, அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு இந்தத் துயர சம்பவம் தெரியவந்தது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு நிர்வாகத்தினர் உடனடியாக ஒன்றிணைந்து இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த அந்தப் பெண், தானே இறுதிக்கடன்களைச் செய்து கணவரின் உடலுக்குத் தீ மூட்டிய காட்சி பார்ப்போர் நெஞ்சை உருக வைத்துள்ளது.
