தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் முதன்மையானவராக இருக்கிறார் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் மற்றும் விடுதலை என குறைவான படங்களையே அவர் இயக்கி இருந்தாலும் அந்த படங்களின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.
முன்னணி நடிகர்களை வைத்து கதையில் சமாதானங்கள் இல்லாமல் அவர் எடுக்கும் படங்கள் கமர்ஷியலாகவும் வெற்றி பெறுகின்றன. இதனால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அவர் படத்தில் நடிக்க சென்றால் குறைந்தது இரண்டு வருடமாவது ஆகிவிடும் என்ற இக்கட்டை பொறுத்துக் கொள்ள வேண்டும்.
இவர் இயக்கிய பொல்லாதவன் திரைப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் அடுத்த படம் 2011 ஆம் ஆண்டுதான் வெளியானது. அந்தளவுக்கு தன் படத்துக்கான ஷூட்டிங்கில் சிரத்தை எடுத்து மெனக்கெடுவார். இந்த படம் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போது முதலில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனவர் த்ரிஷாதான். அவர் முதல் கட்டத்தில் 10 நாட்களுக்கு மேல் ஷூட்டிங்கிலும் நடித்துள்ளார்.
ஆனால் அப்போது அவர் தனது முதல் இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதற்கு முன்னர் ஆடுகளம் ஷூட்டிங் முடிந்துவிடுமென்று நம்பிதான் அவர் இதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அவர் கொடுத்த தேதிகளில் தன்னுடைய காட்சிகளில் கொஞ்சத்தை மட்டும்தான் வெற்றிமாறன் படமாக்கி இருந்தாராம். அதனால் இவர் முழுப்படத்தையும் எப்போது முடிப்பார் என்று பயந்துதான் திரிஷா அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. அவர் பயந்தது போலவே அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் அந்த படத்தின் ஷூட்டிங் விட்டுவிட்டு நடந்துள்ளது.
அதன் பின்னர் த்ரிஷா கதாபாத்திரத்தில் டாப்ஸி நடிக்க ஒப்பந்தமாகி நடித்தார். அதன் மூலம் அவர் தமிழில் அறியப்பட்ட நடிகையாகி பல படங்களில் நடித்து இப்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.