இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தி தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் இளையராஜா. இப்போது 82 வயதாகும் நிலையிலும் வெற்றிமாறன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். அவரின் பயோபிக் இப்போது தனுஷ் நடிப்பில் உருவாக உள்ளது. அந்த படத்துக்கும் அவரே இசையமைக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
அவர் உச்சத்தில் இருந்த 80 களில் தென்னிந்தியாவின் அனைத்து முன்னணி இயக்குனர்களும் அவரோடு ஒரு படமாவது இணைந்து பணியாற்றியுள்ளார்கள். இளையராஜா அன்னக்கிளி படம் மூலமாக அறிமுகமான ஆண்டு 1976. அப்போது தமிழ் சினிமாவில் புகழோடு இருந்தவர் பாலச்சந்தர். ஆனால் அவர் 1985 ஆம் ஆண்டுதான் இளையராஜாவோடு சிந்து பைரவி படத்தின் மூலம் இணைகிறார். இந்த படம் இளையராஜாவுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
இருவரும் இணைந்து அதன் பின்னர் புன்னகை மன்னன், மனதில் உறுதி வேண்டும், உன்னால் முடியும் தம்பி மற்றும் புதுப்புது அர்த்தங்கள் ஆகிய படங்களில் பணியாற்றினர். புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தோடு இந்த வெற்றிக் கூட்டணி முடிவுக்கு வந்தது. இதற்கு திரையுலகில் பலரும் பலவிதமான காரணங்களை சொல்கின்றனர்.
புதுப்புது அர்த்தங்கள் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய பாலச்சந்தர் முடிவு செய்துள்ளார். அதற்காக பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளில் அவசரம் காட்டியுள்ளனர். ஆனால் இளையராஜா அப்போது ஏற்கனவே ஒத்துக்கொண்ட படங்களில் பிஸியாக இருந்ததால் பின்னணி இசைக் கோர்ப்பு தாமதமாகியுள்ளது. இதனால் இளையராஜா இசையமைத்திருந்த ட்ராக் இசையை பின்னணி இசையாக பாலச்சந்தர் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார். அது இளையராஜாவுக்கு பிடிக்கவில்லை. என் அனுமதி இல்லாமல் பின்னணி இசையைப் பயன்படுத்தியதால் இனிமேல் பாலச்சந்தர் படங்களுக்கு இசையமைக்க மாட்டேன் எனக் கூறிவிட்டாராம்.