இரத்தக் கறையான இரண்டாம் கட்டம்… 90 லட்சம் ஓட்டுகள் மாயம்?… வீதியில் இறங்கிய மம்தா… மேற்கு வங்கத்தை அதிரவைக்கும் ‘SIR’ சர்ச்சை…!

By Nanthini on சித்திரை 29, 2026

Spread the love

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 142 தொகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கடந்த வாரம் 152 தொகுதிகளில் நடந்த முதற்கட்டத் தேர்தல் அமைதியாக முடிந்த நிலையில், இன்றைய இரண்டாம் கட்டத் தேர்தல் தொடக்கம் முதலே பரபரப்புடன் காணப்படுகிறது. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் தேர்தல் நடப்பதால், அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் அரசியல் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

வாக்குப்பதிவு தொடங்கிய சில மணிநேரங்களிலேயே சப்ரா, சாந்திபூர் மற்றும் பாங்கர் ஆகிய இடங்களில் மோதல்கள் வெடித்தன. எண்டலி தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால், தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனது ஏஜென்ட்கள் வெளியேற்றப்படுவதாகவும், முறைகேடுகள் நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அதேபோல், நாடியா மாவட்டத்தின் சப்ரா தொகுதியில் பாஜக ஏஜென்ட் மொஷாரப் மிர், ஒரு கும்பலால் இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டதில் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

   

இந்த வன்முறைகளுக்கு மத்தியில், மத்திய பாதுகாப்புப் படைகளின் செயல்பாடு குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்தியப் படைகள் பாஜகவின் ஏஜெண்டுகளைப் போலச் செயல்படுவதாகவும், வாக்காளர்களை அச்சுறுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். “இது ஜனநாயகம் அல்ல, பயங்கரவாதம்” என்று சாடிய அவர், வழக்கத்திற்கு மாறாகத் தேர்தல் நடைபெறும் பவானிபூர் தொகுதியில் நேரடியாகக் களமிறங்கி ஆய்வுகளை மேற்கொண்டார். ஹவுரா உள்ளிட்ட சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயலிழந்ததும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

   

மற்றொருபுறம், வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 90.8 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டது மிகப்பெரிய அரசியல் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இறந்துபோனவர்கள் மற்றும் போலி வாக்காளர்களை நீக்கியதாகத் தேர்தல் ஆணையம் கூறினாலும், பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பவர்களைத் திட்டமிட்டே நீக்கியுள்ளதாகத் திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. முதற்கட்டத் தேர்தலில் 92.88 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை படைத்த நிலையில், இரண்டாம் கட்டத்தில் நிலவும் இந்த வன்முறைச் சூழல் வாக்காளர்கள் மத்தியில் அச்சத்தையும், தேர்தல் முடிவுகள் குறித்த பெரும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.