திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, பெற்ற தாயை மகனே ஓடும் ரயில் முன்பு தள்ளி கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயது முதிர்ந்த நிலையில் சக்கர நாற்காலியில் இருந்த தனது தாயை, ஈவு இரக்கமின்றி ரயில் தண்டவாளத்தில் தள்ளிய இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கோபத்தையும் உண்டாக்கியுள்ளது.
இந்தக் கொலையைச் செய்தவர் உயிரிழந்த மூதாட்டி பத்மாவதியின் மகனான பார்த்தசாரதி எனத் தெரியவந்துள்ளது. மூதாட்டி தனது ஓய்வூதியப் பணத்தைக் கொண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில காலமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நோய்வாய்ப்பட்ட தனது தாயைத் தொடர்ந்து பராமரிக்க முடியாமல் போனதே பார்த்தசாரதியின் இந்த விபரீத முடிவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் உடனடியாகக் குற்றவாளியைக் கண்டறிந்து கைது செய்தனர். போலீஸாரின் விசாரணையில், தாயின் மருத்துவச் செலவு மற்றும் பராமரிப்புச் சுமையைத் தாங்க முடியாமலேயே அவரை ஓடும் ரயிலில் தள்ளிக் கொன்றதாக பார்த்தசாரதி ஒப்புக்கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
