சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது இருசக்கர வாகனத்தை துரத்தும் தெருநாய்களை விரட்டுவதற்காக விசித்திரமான கருவி ஒன்றை பொருத்தியுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சாலைகளில் பயணம் செய்யும்போது நாய்கள் துரத்துவது பலரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை என்றாலும், இந்த நபர் அதற்கு கண்டுபிடித்துள்ள தீர்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ‘நாய் அடிக்கும் குச்சி’ என இணையவாசிகளால் அழைக்கப்படும் இந்த கருவியின் வீடியோ உலகெங்கிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
அந்த வைரல் வீடியோவில், சைக்கிள் போன்ற வாகனத்தில் செல்லும் அந்த நபர், நாய்கள் தன்னை துரத்தி வரும்போது, வாகனத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு நீண்ட குச்சியால் அவற்றின் மீது சரமாரியாக அடிப்பது பதிவாகியுள்ளது. நாய்கள் அருகில் வரும்போதெல்லாம் அந்த குச்சி சுழன்று அவற்றுக்கு அடி கொடுக்கிறது. இந்த சம்பவத்தின் போது அவருக்கு பின்னால் அமர்ந்திருக்கும் ஒரு சிறிய குழந்தை, நாய்கள் அடிவாங்குவதைப் பார்த்து சத்தமாக சிரித்து மகிழ்வதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது.
இந்த வீடியோ இணையத்தில் பலத்த விவாதத்தை கிளப்பியுள்ளது. சிலர் இதனை பாதுகாப்பிற்கான ஒரு சிறந்த வழிமுறையாக கருதுகின்றனர்; குறிப்பாக, நாய்களிடம் கடிபடுவதைத் தவிர்க்க இத்தகைய உபகரணங்கள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் உதவும் என ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், விலங்கு நல ஆர்வலர்களும் நெட்டிசன்கள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வாயில்லா ஜீவன்களை குச்சியால் அடித்து துன்புறுத்துவது கொடுமையானது என்றும், விலங்குகளை காயப்படுத்தாத வகையில் மாற்று வழிகளை அவர் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
