தூத்துக்குடி மாநகர், மாசிலாமணிபுரத்தில் 1953ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காசி விநாயகர் மற்றும் ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, இக்கோவிலைச் சேர்ந்த சுமார் 2,500 வரிதாரர்கள் ஒன்றிணைந்து ஒரு முன்மாதிரியான முடிவை எடுத்துள்ளனர். கோவில் வளாகத்தின் முன்பு, “எங்கள் ஓட்டு விற்பனைக்கு இல்லை” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை (Banner) வைத்து, அரசியல் கட்சியினருக்கும் வேட்பாளர்களுக்கும் தங்களின் உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளனர்.
“ஓட்டு என்னும் மூலப்பொருளைக் கேட்டு வரும் அன்பர்களே, தொழிலதிபர்களே! எங்கள் ஓட்டு ஜனநாயகத்திற்கே தவிர விற்பனைக்கு அல்ல” என்று அந்தப் பதாகையில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்துக் கோவில் தர்மகர்த்தாக்கள் மற்றும் நிர்வாகிகள் கூறுகையில், தங்கள் பகுதியில் உள்ள வாக்காளர்கள் எவ்வித பணத்திற்கும் ஆசைப்படாமல், ஜனநாயக முறைப்படி நல்லவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், பொதுமக்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த முயற்சியை மேற்கொண்டதாகவும் தெரிவித்தனர்.
அரசியல் களத்தில் ஓட்டுக்குக் காசு கொடுக்கும் கலாச்சாரம் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஒரு ஆன்மீகத் தலத்தைச் சார்ந்த இத்தனை வரிதாரர்கள் ஒன்றிணைந்து எடுத்திருக்கும் இந்த முடிவு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நேர்மையான தேர்தலை வலியுறுத்தியும், ஜனநாயகத்தின் மாண்பைக் காக்கவும் தூத்துக்குடி மக்கள் எடுத்துள்ள இந்த முன்னெடுப்பு, மற்ற பகுதிகளுக்கும் ஒரு சிறந்த பாடமாக அமைந்துள்ளது.
