“நான் நம்பி முதல்வராக்கினேன்.. முதுகில் குத்திவிட்டார்கள்.. சிறையிலேயே கொல்லப் பார்த்தார்கள்”… எடப்பாடியில் நின்றபடி கண்ணீர் விட்ட சசிகலா…!

By Nanthini on சித்திரை 19, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட அனலை எட்டியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில், அஇபுதமமுக பொதுச்செயலாளர் சசிகலா நேற்று அதிரடிப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். தனது வேட்பாளர் சுரேஷை ஆதரித்து வேனில் நின்றபடி பேசிய அவர், கொங்கு மண்டலத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியதுதான் தான் செய்த மிகப்பெரிய தவறு என்று ஆவேசமாகக் குறிப்பிட்டார். “யாரும் எளிதில் பெற முடியாத அங்கீகாரத்தை வழங்கிய எனக்கு, முதுகில் குத்தி நன்றிக்கடன் செலுத்திவிட்டார்கள்” என அவர் உருக்கமாகப் பேசினார்.

அதிமுக தலைமையையும் திமுக அரசையும் ஒரே தட்டில் வைத்து விமர்சித்த சசிகலா, இரு தரப்பும் ‘கூட்டுக்களவாணிகளாக’ச் செயல்பட்டுத் தமிழகத்தைச் சூறையாடுவதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் இரு தரப்பிற்கும் இடையே ரகசிய உடன்பாடு இருப்பதாகவும், இதனால்தான் உண்மைக் குற்றவாளிகள் இன்னும் தப்பித்துக் கொண்டிருப்பதாகவும் சாடினார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் தனது சொந்தத் தொகுதியான எடப்பாடிக்கே அடிப்படை வசதிகளையும், பொறியியல் கல்லூரியையும் பெற்றுத்தர இபிஎஸ் தவறிவிட்டார் என்று அவர் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார்.

   

தேர்தல் நடைமுறைகளில் ஜனநாயக விரோதப் போக்கு நிலவுவதாகக் குறிப்பிட்ட சசிகலா, நடிகர் விஜய்யின் தவெக வேட்புமனு நிராகரிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்தார். “ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், ஆனால் போட்டியிடவே விடாமல் தடுப்பது கல்யாண வீட்டில் சீப்பை ஒளித்து வைப்பதைப் போன்றது” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். எடப்பாடி தொகுதியில் சுமார் 61,000 வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ள நிலையில், சசிகலாவின் இந்த நேரடித் தாக்குதல் இபிஎஸ் தரப்பிற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

   

தமிழகத்தின் நிதிநிலை குறித்துப் பேசிய அவர், மாநில அரசு 12 லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிப்பதாகவும், மாதம் 7,000 கோடி ரூபாய் வட்டி மட்டுமே கட்டப்படுவதாகவும் கவலை தெரிவித்தார். இந்தச் சூழலில் பெண்களுக்கு 8,000 ரூபாய் டோக்கன் வழங்குவதாகக் கூறுவது மக்களை ஏமாற்றும் மோசடி வேலை என்று திமுகவைச் சாடினார். நிர்வாகத் திறமையற்ற அரசையும், துரோகம் செய்தவர்களையும் இந்தத் தேர்தலில் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும் என்று கூறி சசிகலா தனது உரையை நிறைவு செய்தார். இது எடப்பாடி தொகுதியில் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.