கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக, தற்போது ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை வெற்றி திரையரங்கிற்கு வந்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் படக்குழுவினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரசிகர்களுடன் கலந்துரையாடி, குழந்தைகளுடன் நடனமாடி மகிழ்ந்த விஷ்ணு விஷால் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கிடைத்துள்ள பெரும் வரவேற்பு தமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உணர்ச்சிப்பூர்வமான நெகிழ்ச்சியையும் அளிப்பதாகத் தெரிவித்தார்.
சினிமாவில் நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தைப் பகிர்ந்த விஷ்ணு விஷால், வீட்டில் இருந்து வேலை செய்யும் பெண்களின் முக்கியத்துவத்தை சமுதாயம் உணர வேண்டும் என்றார். சமையல் மற்றும் வீட்டு வேலைகளைச் செய்யும் கணவனை இந்தச் சமூகம் ‘லூசராக’ பார்ப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், வீட்டில் இருந்து வேலை பார்ப்பது ஒரு ‘சூப்பர் பவர்’ என்றும், கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்தல் மற்றும் சமத்துவம் மிக முக்கியம் என்றும் கூறினார். மேலும், தனது சொந்த திருமண வாழ்க்கை முறிவில் இருந்து தான் கற்றுக் கொண்ட பாடங்களை நினைவுகூர்ந்த அவர், தம்பதியினருக்குள் ஏதேனும் பிரச்சனை வந்தால் உடனடியாக முடிவெடுக்காமல், பொறுமையுடன் ஒருவருக்கொருவர் நேரம் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பமும் வாழ்க்கையும் மாறுவதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், ரீல்ஸ் உலகத்தைத் தாண்டி நிஜ வாழ்க்கை இருப்பதை உணர்ந்து மக்கள் வாழ வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தின் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து ரிலீஸாக இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். சில காரணங்களால் இப்படம் தாமதமானாலும், தியேட்டர்களில் வெளியாகும் போது இது தமிழகத்தின் மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கப்போகிறது என்றும், அந்தப் படத்தைக் காண்பதற்குத் தானும் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதாகவும் விஷ்ணு விஷால் தெரிவித்தார்.
