வரவிருக்கும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழக அரசியல் களத்தில் கடுமையான விவாதங்களையும் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும், எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே காரசாரமான அரசியல் போரே நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படும் உதயநிதி ஸ்டாலின் எழுப்பும் கூர்மையான கேள்விகள் மற்றும் விமர்சனங்களை எதிர்கொள்ள முதல்வர் விஜய் ஒரு புதிய உளவியல் வியூகத்தை வகுத்துள்ளதாகக் கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வியூகத்தின் முதன்மை அம்சமாக, உதயநிதியின் தாக்குதல்களுக்கு முதல்வர் விஜய் நேரடியாகப் பதிலளிப்பதைத் தவிர்த்து, சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசுவை ஒரு ‘டிரம்ப் கார்ட்’ ஆகப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மூத்த தலைவராகவும், கள அனுபவம் மிக்க ஊடக விவாதாகராகவும் திகழும் வன்னியரசு, திமுகவின் விமர்சனங்களை முறியடிப்பதில் தவெக அரசின் முன்னணி அரணாகத் திகழ்கிறார். முக்கியமான கேள்விகளுக்கு வன்னியரசு மூலம் உரிய பதலடி கொடுக்கும் போது, எதிர்க்கட்சியின் தாக்குதல்களைத் திறம்படக் கட்டுப்படுத்த முடியும் என தவெக வியூக வகுப்பாளர்கள் கணக்கிடுகின்றனர்.
இந்த நடவடிக்கைக்குப் பின்னால் ஒரு நுட்பமான அரசியல் பிம்பக் கட்டமைப்பும் மறைந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு முதல்வர் நேரடியாகப் பதிலளிக்காமல் தனது அமைச்சரை முன்நிறுத்துவதன் மூலம், “விஜய், உதயநிதிக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறார்” என்ற செய்தியைத் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் கடத்த தவெக விரும்புகிறது. உதயநிதியைத் தனக்கு நேரடிப் போட்டியாளராகக் காட்டிக் கொள்ளாமல், அவரைவிட ஒருபடி மேலான தலைவராகத் தன்னைக் காட்டிக் கொள்வதும், எதிர்க்கட்சியைக் கையாள அமைச்சர்களே போதும் என்ற அதிகார தோரணையை வெளிப்படுத்துவதுமே இதன் முக்கிய நோக்கமாகும்.
ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்ற விவகாரத்தில் திமுகவுக்கும் வன்னியரசுக்கும் இடையே கருத்து மோதல்கள் நிலவி வரும் சூழலில், வரவிருக்கும் கூட்டத்தொடரில் திமுகவின் கணைகளைத் தடுக்கும் கேடயமாக வன்னியரசு செயல்படுவார் என்பதில் சந்தேகமில்லை. விஜய்யின் இந்த முடிவு தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், திமுகவின் அனுபவம் வாய்ந்த சட்டமன்ற உறுப்பினர்களையும் உதயநிதியின் கேள்விகளையும் வன்னியரசு எந்த அளவுக்குத் திறம்பட எதிர்கொள்கிறார் என்பதில்தான் இந்த உளவியல் வியூகத்தின் முழு வெற்றியும் அடங்கியுள்ளது.
