2029 நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் தேசிய அளவிலான வியூகங்களும், சமீபத்திய ‘மூட் ஆஃப் தி நெஷன்’ கருத்துக்கணிப்பில் 9.2 சதவீத ஆதரவுடன் தேசிய அளவில் 3-வது இடத்தை அவர் பிடித்திருப்பதும் அகில இந்திய காங்கிரஸ் மேலிடத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யைப் பிரதமர் வேட்பாளராகச் சித்தரிப்பதற்கு எதிராகத் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அண்மைக்காலமாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இருப்பினும், மாநிலத்தின் தற்போதைய அரசியல் எதார்த்தத்தை உணராமல் காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருவதாகவும், டெல்லி மேலிடம் உடனடியாகத் தமிழகக் கள நிலவரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மமக உள்ளிட்ட 22 அமைப்புகளை உள்ளடக்கிய பிரம்மாண்ட மெகா கூட்டணியை எதிர்த்துத் தனித்து நின்று தவெக களம் கண்டது. ஆளுங்கட்சியின் முழு நிர்வாக மற்றும் அதிகாரப் பலத்துடன் செயல்பட்ட இந்த மெகா கூட்டணியின் பலமான அரணை உடைத்து, முதல் தேர்தலிலேயே சுமார் 35 சதவீத வாக்குகளை அறுவடை செய்து விஜய் அதிகாரத்தைக் கைப்பற்றினார். அத்தனை கட்சிகளின் கூட்டு வலிமையையும் மீறித் தமிழ்நாட்டு மக்கள் விஜய்யின் கரங்களை வலுவாகப் பற்றியது சாதாரண அரசியல் சாதனையல்ல; இதுவே இன்றைக்கு தேசிய அளவில் விஜய்யின் மிகப்பெரிய அரசியல் மூலதனமாக உருவெடுத்துள்ளது.
2016 முதல் திமுக ஆட்சியைப் பிடிக்கவும் தக்கவைக்கவும் காங்கிரஸின் வாக்கு வங்கி தேவைப்பட்டதால், அப்போதெல்லாம் திமுகவிடம் காங்கிரஸ் கட்சியால் பேரம் பேச முடிந்தது. ஆனால், தவெகவைப் பொறுத்தவரை கள நிலவரம் முற்றிலும் தலைகீழாக உள்ளது. தேர்தலுக்கு முன்பாகவே தவெகவுடன் முறைப்படியான கூட்டணியை இறுதி செய்யாமல் திமுக பக்கமே நின்றதால், காங்கிரஸ் தனது பேர பலத்தை ஆரம்பத்திலேயே இழந்துவிட்டது. தற்போதைய சூழலில், தவெக அரசுடன் இணைந்திருப்பதால் காங்கிரஸுக்கு அரசியல் ரீதியான பலன்கள் கிடைக்கலாமே தவிர, காங்கிரஸ் இல்லையென்றால் தவெகவால் ஆட்சியையோ அரசியல் செல்வாக்கையோ தக்கவைக்க முடியாது என்ற நிலைமை இங்கு இல்லை என்பதை அக்கட்சி உணர வேண்டும்.
2029 நாடாளுமன்றத் தேர்தலில் விஜய்யின் ஆதரவு என்பது முந்தைய காலங்களைப்போல எவ்வித நிபந்தனையுமற்ற சரணடைதலாக நிச்சயம் இருக்காது. ஒருவேளை ராகுல் காந்தியின் பிரதமர் வேட்பாளர் தேர்வுக்கு விஜய் ஆதரவளிப்பதாக இருந்தாலும், அது ராகுல் காந்தியின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்காது; மாறாக, தென் மாநிலங்களின் உரிமைகள், தொகுதி மறுவரையறை, நிதிப் பகிர்வு மற்றும் தவெகவின் 100 தொகுதிகள் இலக்கு போன்ற விஜய்யின் கொள்கை சார்ந்த நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அமையும். திமுகவின் வாக்கு பலத்தால் மட்டுமே வெற்றி பெற்ற உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களின் மிரட்டல்களை விஜய் பொருட்படுத்தப் போவதில்லை என்பதால், எதார்த்த நிலையை உணர்ந்து செயல்படாவிட்டால் அது தவெகவை விட காங்கிரஸுக்கே தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் இழப்பை ஏற்படுத்தும்.
