டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்குக் கூடுதல் விலை வசூலிப்பதைத் தடுக்க, தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். இதன்படி, முதல் முறை தவறிழைக்கும் விற்பனையாளருக்கு ஒரு மாத தற்காலிக பணிநீக்கமும், இரண்டாவது முறை தவறு செய்தால் மூன்று மாத பணிநீக்கமும் விதிக்கப்படும். தொடர்ந்து மூன்றாவது முறையும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்படுவதோடு துறைரீதியான குற்றக் குறிப்பாணையும் வழங்கப்படும். மேலும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 10 ரூபாய் அல்லது அதற்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், இந்த அபராதத் தொகையில் 60 சதவீதத்தை விற்பனையாளரும், 40 சதவீதத்தைக் கடைக் கண்காணிப்பாளரும் செலுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றித் கழகத் தலைவர் விஜய் தலைமையிலான அரசு, சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு ஆகியவற்றில் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் அமைந்திருந்த 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதற்குப் பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அத்துடன், 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்ற விதியை மிகக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அரசு அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.
அரசு இத்தனை கட்டுப்பாடுகளையும் எச்சரிக்கைகளையும் விதித்த போதிலும், பல இடங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் தொடர்ந்து மதுபாட்டில்களுக்குக் கூடுதல் தொகையை வசூலித்து வருவதாகக் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. கூடுதல் விலை வசூலைத் தடுக்கத் தவறும் அல்லது அலட்சியம் காட்டும் உயரதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை பாயும் என நிர்வாகம் எச்சரித்த போதிலும், நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை.
கூடுதல் விலை விவகாரம் அரசிற்குத் தொடர் சிக்கலை ஏற்படுத்தி வரும் நிலையில், டாஸ்மாக் மதுக்கடைகளைத் தனியார்மயமாக்க அரசு திட்டமிட்டு வருவதாகக் தகவல்கள் கசிந்துள்ளன. இருப்பினும், டாஸ்மாக் கடைகள் தனியார்மயமாக்கப்பட்டால் சங்கம் சார்பில் நாடு தழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகள் மற்றும் விற்பனையாளர்களின் எதிர்ப்பு ஆகியவற்றால் டாஸ்மாக் விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
