தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) முழுமையாக இணைய வேண்டுமானால், அக்கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும், சமூகநீதித்துறைக்கு பதிலாக வேறு முக்கிய அமைச்சர் இலாகா மாற்றிக் கொடுக்கப்பட வேண்டும் மற்றும் வாரிய பதவிகள் ஒதுக்கப்பட வேண்டும் என விஜய்யிடம் விசிக நிபந்தனை விதித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவின. விசிக தற்போது திமுக கூட்டணியிலிருந்து முழுமையாக வெளியேறாத நிலையில், இந்த 3 டிமாண்ட்கள் தான் தவெக உடனான முழுமையான கூட்டணிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த அத்தனை தகவல்களும் முற்றிலும் வெறும் யூகங்கள் மட்டுமே என்று கூறி விசிக தலைவர் தொல். திருமாவளவன் இந்த சர்ச்சைகளுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முதல் நாள் ஊடக சந்திப்பிலேயே இது குறித்து நான் மிகத் தெளிவாக விளக்கிவிட்டேன். வரவிருக்கும் இடைத்தேர்தல் எதிலும் நான் போட்டியிடப் போவதில்லை. அதே நேரத்தில், அமைச்சர் பதவியின் இலாகாவை மாற்றித் தர வேண்டும் என்றோ, திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என்றோ தவெகவுக்கு நாங்கள் எந்தவித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை, எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை” என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மேலும் தவெக தரப்பிலான சந்திப்பு குறித்துப் பேசிய திருமாவளவன், தவெகவின் முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த் ஆகியோர் தன்னை முறைப்படி சந்தித்ததை உறுதிப்படுத்தினார். தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தரும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து ஒரு தேனீர் விருந்து நிகழ்ச்சிக்கு தவெக திட்டமிட்டுள்ளதாகவும், அதில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றுப் பேசவிருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார். அக்கூட்டணி சந்திப்புக்கு பிறகே என்ன பேசப்பட்டது என்பது முழுமையாகத் தெரியவரும் என்று கூறியுள்ள திருமாவளவன், தவெகவுடன் இணக்கமாக இருக்கும் அதே வேளையில் திமுக குறித்தும் நேர்மறையாகப் பேசி வருவது அரசியல் ரீதியான பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.
