ஹோண்டுராஸ் நாட்டின் சான் பெட்ரோ சுலா பகுதியில் அமைந்துள்ள நுவேவோஸ் ஹாரிசாண்டஸ் நகரைச் சேர்ந்த ஜெனிசிஸ் மரியா மார்ட்டினெஸ் என்ற 11 வயது சிறுமி கடத்தப்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சிறுமி ஒருவரை ஒருவர் பலவந்தமாகக் கடத்திச் செல்வது போல் காட்சிகள் பதிவாகியுள்ளன. இச்சம்பவம் நடந்து சுமார் ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், காணாமல் போன சிறுமியின் நிலைக் குறித்து எந்தத் தகவலும் தெரியாமல் அவரது குடும்பத்தினர் மீளாத் துயரத்திலும் தீவிரத் தேடலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளியான சிசிடிவி பதிவிற்கும் சிறுமி ஜெனிசிஸ் மாயமான வழக்குக்கும் உள்ள தொடர்பைக் காவல் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இருப்பினும், இந்த வீடியோவில் இருப்பது அதே சிறுமிதானா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சிறுமியைப் பாதுகாப்பாக மீட்கப் பொதுமக்கள் ஏதேனும் தகவல் தெரிந்தால் உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
