“பதவி பறிப்பு.. வாட்ஸ்அப் அவதூறுகள்”…. பொறுத்தது போதும் என பொங்கிய எஸ்பி வேலுமணி… அதிமுகவில் உச்சகட்ட பனிப்போர்…!

By Nanthini on ஆனி 29, 2026

Spread the love

சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு, எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட இழந்துள்ள நிலையில், கட்சியின் உட்கட்சிப் பூசல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பல முன்னாள் அமைச்சர்கள் தவெக, திமுக நோக்கி நகர்ந்து வரும் வேளையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது வலதுகரமாகத் திகழ்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கும் இடையே கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. இதன் வெளிப்பாடாக, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் அதிமுகவின் கொடி, பேனர், போஸ்டர் எதுவுமின்றி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்களை மட்டுமே வைத்து வேலுமணி தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் தனது மனக்குமுறல்களை வெளிப்படுத்திய வேலுமணி, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இதுவரை உரிய மரியாதை அளித்து வந்ததை சுட்டிக்காட்டினார். ஓ.பன்னீர்செல்வம் தேர்தலில் இணைந்திருந்தால் கட்சி பலம் பெற்றிருக்கும் என்று குறிப்பிட்ட அவர், தேர்தலுக்குப் பிறகு திமுகவுடன் கூட்டணி என்று தலைமை எடுத்த முடிவே தற்போதைய அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். திமுகவை எதிர்ப்பதற்காகவே எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக, அதனுடன் கைகோர்ப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது என்றும், இந்த முடிவை 30 மாவட்ட செயலாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

   

தொடர்ந்து பேசிய வேலுமணி, கட்சியை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்ல முயற்சி நடப்பதாக ஆதங்கம் தெரிவித்தார். “பொதுக்குழுவைக் கூட்டி விவாதிக்க நினைத்தோம், ஆனால் அது நடக்கவில்லை; செங்கோட்டையன், ஓபிஎஸ், ஜேசிடி பிரபாகர் என ஒவ்வொருவராக வெளியேறியது போல நானும் வெளியேறுவேன் என நினைக்கிறார்கள்” என்று குறிப்பிட்ட அவர், இனி தனக்கு பதவிகள் இல்லாவிட்டாலும் சாதாரண உறுப்பினராக இருந்து தன்னை நம்பியவர்களுக்கு உறுதுணையாக நிற்பேன் என்றார். வேலுமணியின் தலைமை நிலைய செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டு, அவருக்கு ‘டம்மி’ பதவி வழங்கப்பட்டதோடு, அவரது ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டதே இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

   

வேலுமணியின் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவரது தொண்டர்களும் ஆதரவாளர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். 32 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட பெருமைமிக்க அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்வதாகக் சாடிய அவர்கள், வேலுமணி காட்டும் வழியே தங்களின் வழி என்றும், கட்சியை விட்டுப் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், கட்சியின் நலன் சார்ந்து வேலுமணி கூறும் நல்ல கருத்துகளைத் தலைமை ஏற்க மறுத்தால், அதிமுகவுக்குள் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும் என்றும் தொண்டர்கள் கொந்தளிப்புடன் எச்சரித்துள்ளனர்.