உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயத்ரி தேவி என்ற 55 வயது மூதாட்டி படுகாயமடைந்து சாலையில் மயங்கிக் கிடந்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் பிரதீப் குமார் சிங், அந்த மூதாட்டியை மீட்டுத் தனது கைகளிலேயே தூக்கிக்கொண்டு ஓடி, அருகில் உள்ள மருத்துவரிடம் முதலுதவி சிகிச்சைக்காகச் சேர்த்தார். அதிகாரியின் இந்த உடனடி உதவியைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஆரம்பத்தில் அவரை வெகுவாகப் பாராட்டினர்.
ஆனால், இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நிலைமையை முற்றிலும் மாற்றியது. அந்த வீடியோவில், ஆய்வாளர் படுகாயமடைந்த பெண்ணைக் கைகளில் சுமந்து கொண்டு ஓடும்போது, அவருக்குப் பின்னால் ஒரு போலீஸ் ஜீப் காலியாக ஊர்ந்து வருவது தெளிவாகப் பதிவாகியிருந்தது. அவசர உதவி தேவைப்படும் ஒருவரை அந்த வாகனத்தில் ஏற்றிச் சென்றிருந்தால் இன்னும் விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்திருக்க முடியும் என்பதால், அதிகாரியின் இந்தச் செயல் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள், இது வெறும் சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்ப்பதற்காகச் செய்யப்பட்ட ‘சிங்கம் பட பாணி’ சாகசம் என்று காவல் அதிகாரியைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “அவசர மருத்துவச் சிகிச்சையின் போது ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்றது; கேமராவிற்காக இப்படிச் செய்வதை விட, பின்னால் வரும் காலியான வாகனத்தில் அவரை ஏற்றிச் சென்றிருந்தால் நோயாளியின் உயிருக்கு இன்னும் பாதுகாப்பாக இருந்திருக்கும். விளம்பரம் தேடும் இதுபோன்ற செயல்கள் முற்றிலும் முட்டாள்தனமானது” என்று இணையவாசிகள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
