தமிழ் சினிமாவில் 50 களில் இருந்து 77 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால்தான் அரசியலுக்கு வந்தபோதும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தார்.
ஆனால் எம் ஜி ஆருக்கு இந்த வெற்றிகள் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. அவர் சினிமாவில் 1930 களிலேயே அறிமுகமாகிவிட்டாலும் 50 களின் தொடக்கத்தில்தான் அவரால் ஒரு கதாநாயகனாக் நிலைபெற முடிந்தது. அதுவரை துண்டு துக்கடா வேடத்தில்தான் நடித்து வந்தார்.
சுதந்திரத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் திமுக எனும் கட்சி அசுர வேகத்தில் வளர்ந்து வந்த நிலையில் அப்போது அதன் பிரதிநிதியாக தன்னை இணைத்துக் கொண்ட எம் ஜி ஆர், அந்த கட்சியின் பிரச்சாகராக சினிமாவில் தன்னை முன்னிறுத்தினார். கட்சியின் வளர்ச்சிக்கு எம் ஜி ஆரும், எம்ஜி ஆரின் பிரபலத்துக்கு திமுகவும், அதன் தொண்டர் படையும் உதவினர்.
இந்நிலையில்தான் 1972 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் அவர் இயக்கி தயாரித்து நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் ரிலீஸூக்குத் தயாரானது. ஆனால் அந்த பட ரிலீஸுக்கு அப்போதைய ஆளுங்கட்சியிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்துள்ளன. அதன் உச்சகட்டமாக படத்துக்கு போஸ்டர் கூட ஒட்ட முடியாத அளவுக்கு பிரச்சனகள் வந்துள்ளன. அதனால் சிங்கப்பூரில் இருந்து ஸ்டிக்கர்களை வரவழைத்துள்ளார் எம் ஜி ஆர்.
மேலும் படத்தை ரிலீஸ் செய்யும் தியேட்டர்கள் அடித்து உடைக்கப்படுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஆனால் தியேட்டர்கள் தாக்கப்பட்டால் தான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று சொல்லி உத்தரவாதம் கொடுத்து ரிலீஸ் செய்துள்ளார் எம் ஜி ஆர்.
இப்படி பல தடங்கல்களை எதிர்கொண்டு 1973 மே மாதம் 11-ந்தேதி போஸ்டர்களே ஒட்டப்படாமல் உலகம்சுற்றும் வாலிபன் ரிலீசாகி எதிர்பார்க்காத வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றி தமிழ் சினிமாவை மட்டுமில்லாமல் ஆட்சியாளர்களையும் அலறவைத்தது. இந்த படத்தின் வெற்றி அடுத்த சில ஆண்டுகளில் எம் ஜி ஆர் பெறப்போகும் அரசியல் வெற்றியை முன்கூட்டியே பறைசாற்றிய ஒன்று என நாம் சொல்லலாம்.